காங்கிரசுக்கு அல்வா..! விசிகவுக்கு பொங்கல்..! இடதுசாரிகளுக்கு இனிப்பு..! திமுக கூட்டணி கலாட்டா..!
சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு கிட்டத்தட்ட அதிமுக கூட்டணி சிதறுண்டு போய்விட்டது. ஆனால் திமுக கூட்டணி அப்படியே நீடிக்கிறது. இதற்கு காரணம் உள்ளாட்சித் தேர்தல். ஆளும் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டால் உள்ளாட்சித் தேர்தலில் சிந்தாமல் சிதறாமல் வெற்றி பெறலாம் என்பது தான் காங்கிரஸ், விசிகி, மதிமுக மற்றும் இடதுசாரிக்கட்சிகளின் நம்பிக்கை.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி நீடிக்கும் என்று கூறிவிட்டாலும் இடப்பங்கீடு தொடர்பாக மாவட்ட அளவில் பேசிக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைமை கூறிவிட்ட நிலையில் மாவட்டச் செயலாளர்களிடம் கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.
சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு கிட்டத்தட்ட அதிமுக கூட்டணி சிதறுண்டு போய்விட்டது. ஆனால் திமுக கூட்டணி அப்படியே நீடிக்கிறது. இதற்கு காரணம் உள்ளாட்சித் தேர்தல். ஆளும் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டால் உள்ளாட்சித் தேர்தலில் சிந்தாமல் சிதறாமல் வெற்றி பெறலாம் என்பது தான் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் இடதுசாரிக்கட்சிகளின் நம்பிக்கை. இதனால் தான் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் இந்த கட்சிகள் அமைதி காத்து வருகின்றன. கூட்டணியை திமுக மேலிடம் உறுதிப்படுத்திவிட்டது.
ஆனால் நடைபெறுவது ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பதால், இடப்பங்கீடு பேச்சுவார்த்தையை மாவட்ட அளவில் வைத்துக் கொள்ளுமாறு கூட்டணி கட்சிகளின் தலைமையிடம் திமுக திட்டவட்டமாக கூறிவிட்டது. அதன்படி, திமுக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களிலும் காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் மற்றும் சிறு சிறு கட்சிகளின் நிர்வாகிகள் இடப்பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் கட்சி அடிப்படையில் தேர்தல் இல்லை என்பதால் அது குறித்து பேசவே வேண்டாம் என்று திமுக திட்டவட்டமாக கூறிவிட்டது.
ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட குழு கவுன்சிலர் என இரண்டு பதவிகளுக்கான இடங்களை மட்டுமே திமுக கூட்டணி கட்சிகளுடன் பங்கிட்டுக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் தொடங்கி கூட்டணியில் உள்ள சிறு கட்சிகள் வரை யார் யாருக்கு எத்தனை இடங்கள் வழங்க வேண்டும் என்று மாவட்ட வாரியாக திமுக தலைமை மாவட்டச் செயலாளர்களுக்கு சில அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளது. அதன்படியே இடங்களை திமுக மாவட்டச் செயலாளர்கள் ஒதுக்கி வருகின்றனர். சுமார் 10 சதவீத இடங்களை எதிர்பார்த்த காங்கிரசுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் காங்கிரசுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதே போல் விசிகவும் சுமார் 5 சதவீத இடங்களை எதிர்பார்க்கும் நிலையில் ஒரு சதவீத இடங்கள் மட்டுமே என்று மாவட்டச் செயலாளர்கள் கூறுவதாக சொல்கிறார்கள். அத்துடன் மதிமுகவிற்கு பெரிய அளவில் வட மாவட்டங்களில் இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்கிறார்கள். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நெல்லை மற்றும் தென்காசியில் மட்டுமே மதிமுகவிற்கு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதே போல் இடதுசாரிகளை பொறுத்தவரை நெல்லை, தென்காசியில் மட்டுமே கணிசமான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
இதனால் ஒட்டு மொத்தமாக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் மாவட்ட தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்கிறார்கள். அதே சமயம் சில மாவட்டங்களில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் கவனித்து இடப்பங்கீட்டில் இழுபறியை முடித்து வைத்துள்ளதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. ஆக மொத்தம் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தொடங்கி இடதுசாரிகள் வரை யாருக்கும் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.