உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்ற உத்தரவில் சந்தேகம் என்று மீண்டும் உச்சநீதிமன்றம் சென்ற திமுகவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்தல் நடைபெறவில்லை என்றும் எனவே தமிழகத்தில் தேர்தல் நடைபெறாது என்று திமுக வழக்கறிஞர் வில்சன் கூறி வந்தார்.

இதனால் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா நடைபெறாதா என்று குழப்பம் இருப்பதாக திமுக தரப்பு வதந்திகளை பரப்பி வந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அப்போது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தங்களுக்கு சில சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார்.

இர்ரெஸ்பிக்டிவ் ஆஃப் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று கூறியுள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்தாமல் எப்படி தேர்தல் நடைபெறும் என்று சந்தேகம் எழுப்பப்பட்டது. மேலும் இர்ரெஸ்பெக்டிவ் ஆஃப் என்கிற வார்த்தையை தாங்கள் எப்படி அர்த்தம் கொள்வது அதற்கு இரண்டு அர்த்தம் இருக்கிறது என்கிற ரீதியில் வாதங்கள் சென்று கொண்டிருந்தன.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, மீண்டும் மீண்டும் திமுக தரப்பு சொன்னதையே சொல்கிறது. இதன் மூலம் நேரத்தை வீணடிக்கிறார்கள், நீதிமன்றம் திமுக தரப்பு கோரிக்கையை ஏற்க கூடாது என்றார். இதனை அடுத்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடரும் என்றும் அதில் மீண்டும் தலையிட விரும்பவில்லை என்ற கூறி திமுக கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு எப்படியேனும் தடை பெற்றுவிடலாம் என்று உச்சநீதிமன்றத்தை நேற்று அணுகிய திமுகவிற்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்தது.