மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் இல்லாத பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள், அதற்கான கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் இறுதிக்குள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால், திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதன்மூலம், இந்த பதவிகளுக்கு இனி நேரடி தேர்தல் இல்லை என்று உறுதியாவிட்டது. 

இந்நிலையில், இந்த பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு முடிந்த பிறகு நவம்பர் 25 முதல் 29 வரை தாங்கள் செலுத்திய கட்டண ரசிதை காட்டி, கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.