அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் !! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி… அரசின் அடுத்த சாதனை !!
தமிழக அரசு பள்ளிகளில் இன்று முதல் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் சோதனை முயற்சியாக 2,381 அங்கன்வாடிகளில் 3 ஆண்டுகள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் செயல்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். இதனால் அங்கன்வாடி மையங்களில் நான்கு முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் சேர்வது குறைந்து வருகிறது.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடிகளில் ஜனவரி முதல் இந்த வகுப்புகள் துவங்க ஏற்பாடு நடைபெற்றது.
இந்நிலையில்,சென்னை எழும்பூர் அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் பழனிசாமி அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.
7 குழந்தைகளுக்கு சீருடைகள், புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., யுகேஜி வகுப்புகள் துவங்க உள்ளது. இதற்கான வரும் கல்வி ஆண்டில் ரூ.7.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.