வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்பதை பாஜக மூத்தத் தலைவர்கள் எல்.கே. அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் முடிவு செய்துகொள்ள பாஜக தலைமை விட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 பாஜகவில் எ.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஓரங்கட்டுப்பட்டுவிட்டதாக தொடர்ச்சியாக அரசியல் அரங்கில் பேசப்பட்டுவருகிறது. கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருவருக்கும் வாய்ப்பு கிடைத்து. அத்வானி காந்தி நகர் தொகுதியிலும்; முரளி மனோகர் ஜோஷி கான்பூர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். ஆனால், அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. இதன்பிறகு எல்.கே. அத்வானி குடியரசுத் தலைவராக முன்னிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் அந்த எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது.

பாஜகவை வளர்த்தெடுத்த முக்கிய தலைவர்களானரான அத்வானியும் முரளி மனோகர் ஜோஸியும் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவார்களா என்ற கேள்வி கடந்த சில மாதங்களாகவே இருந்துவருகிறது. ஏனென்றால், பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீட்டுகள் வழங்குவதை பாஜக மேலிடம் கட்டுப்படுத்திவருகிறது. இதன் காரணமாக 91 வயதான அத்வானியும், 84 வயதான ஜோஷியும் இந்த முறை தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் என்ற பேச்சு பாஜக தொண்டர்கள் மத்தியில் உலாவி வருகிறது.  ஆனால், இருவரும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி அவர்கள் முடிவுக்கே பாஜக தலைமை விட்டுவிட்டதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இரு தலைவர்களுடனும் பாஜக தலைமை பேசியதாகவும்,  அதன் பிறகே தேர்தலில் போட்டியிடும் முடிவை அவர்களிடமே கட்சித் தலைமை விட்டுவிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 75 வயதைக் கடந்தவர்கள் பாஜகவில் அமைச்சர் ஆவதற்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தலில் போட்டியிட எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று இரு தலைவர்களுக்கும் பாஜக தலைமை விளக்கியதாகவும் கூறப்படுகிறது. எனவே இதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் முடிவை இரு தலைவர்களும் எடுப்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மத்திய அமைச்சர்களான சுஷ்மா சுவராஜ், உமா பாரதி ஆகியோர் தங்கள் உடல்நிலையைக் காரணம் காட்டி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் அத்வானி, ஜோஷி ஆகியோர் என்ன முடிவை எடுப்பார்கள் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.