போலீசாரை தடுத்த தம்பதியர், வீட்டில் சிறப்பு பூஜை நடந்து வருகிறது, இரண்டு மகள்களையும் நரபலி கொடுத்துள்ளோம், ஒரு நாள் வரை பொறுத்துக்கொள்ளுங்கள் இரண்டு மகள்களும் மீண்டும் உயிர் பிழைத்து வருவார்கள், அதன் பின்னர் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என கூலாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
சாமியாரின் பேச்சைக் கேட்டு தான் பெற்ற இரண்டு மகள்களையும் பெற்றோர்களே நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
மனித சமுகத்தின் அறிவியல் ஆற்றலால் இந்த உலகம் பல புதுமைகளையும், வியத்தகு வளர்ச்சிகளையும் அடைந்துவரும் அதே நேரத்தில், இன்னும் இச்சமூகத்தில் மண்டிகிடக்கும் மூடநம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் இச்சமூகத்தை காட்டுமிராண்டி சமூகமாகவே இருத்திவைத்திருப்பதை பார்க்க முடிகிறது. அதற்கு அடையாளமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பல விரும்பத்தகாத கொடூர சம்பவங்கள் இப்பூவுலகில் அரங்கேறி வருகிறது. அதீத மூட நம்பிக்கையால், போலிச்சாமியார்கள் இடம் பெண்கள் கற்பை பறி கொடுப்பது, பெற்ற பிள்ளைகளையை துடிக்கத் துடிக்க பெற்றோர்கள் நரபலி கொடுப்பது போன்ற கொடூர சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இதைத் தடுக்க காவல்துறை எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும், இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த வரிசையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி சிவ நகரில் பெற்றப் பெண் பிள்ளைகளை நிர்வாணப்படுத்தி பெற்றோரே நரபலி கொடுத்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவன் நகரில் வசித்து வருபவர் புருஷோத்தம். இவர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மஜா அதே கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவர்களுக்கு அழகான இரண்டு மகள்கள் இருந்தனர். மூத்த மகள் அலேக்கியா (27) வனத்துறை அதிகாரிக்கான தேர்வுக்கு தயாராகி வந்தார். இரண்டாவது மகள் சாய் திவ்யா (25) இவர் பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானுக்கு சொந்தமான இசை கல்லூரியில் பயின்று வந்தார். புருஷோத்தம் மற்றும் பத்மஜா இருவருமே ஆன்மிகத்தில் அதீத நாட்டம கொண்டவர்களாக இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு சாமியார் ஒருவர் அறிமுகமானார். அவரின் பேச்சை நம்பி வந்த தம்பதியிடம், தன் சொல்படி கேட்டாள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் என அவர் கூறியுள்ளார்.

இதனை நம்பியார் புருஷோத்தம்- பத்மஜா தம்பதியர் வீட்டு பூஜை அறையில் இரு மகள்களையும் நிர்வாணப்படுத்தி, அவர்களை வெட்டி பலி கொடுத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து விசாரித்தனர். அப்போது போலீசாரை தடுத்த தம்பதியர், வீட்டில் சிறப்பு பூஜை நடந்து வருகிறது, இரண்டு மகள்களையும் நரபலி கொடுத்துள்ளோம், ஒரு நாள் வரை பொறுத்துக்கொள்ளுங்கள் இரண்டு மகள்களும் மீண்டும் உயிர் பிழைத்து வருவார்கள், அதன் பின்னர் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என கூலாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அவர்களின் பேச்சைக் கேட்டு அதிர்ந்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்ததுடன், பூஜை அறையில் நிர்வாண நிலையில் கிடந்த மகள்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நல்ல படிப்பறிவு இருந்தும் பகுத்தறிவு இல்லாமல் போனதால் மூடநம்பிக்கையில் இரண்டு மகள்களையும் கொலை செய்யும் அளவிற்கு பெற்றோர்கள் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
