liquor will be sales in Jarkhand assembly...mla request
ஜார்கண்ட் மாநில சட்டசபை வளாகத்திற்குள் மதுக்கடை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுவிலக்கு
ஜார்கண்ட்டில் பாஜகவைச் சேர்ந்த ரகுபர் தாஸ் முதல்வராக இருந்து வருகிறார். பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மதுவிலக்கு கொள்கையால் ஈர்க்கப்பட்ட ஜார்கண்ட் அரசு, மாநிலத்தில் மதுவிலக்கை அமல் படுத்தும் வகையில் சமீபத்தில் மாநிலத்தில் உள்ள மது கடைகளுக்கான உரிமங்களை ரத்து செய்தது.

இரவு 10 மணிவரை
பின்னர் பொது ஏலம் மூலம் அனுமதிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் நகரங்களின் புறநகர் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் மட்டும் இரவு 10 மணி வரை மட்டுமே மது பானங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த மாநில எம்.எல்.ஏக்கள் சட்டசபை வளாகத்திலேயே மதுக்கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரவை வளாகத்திற்குள்
இது குறித்து அவர்கள் கூறியதாவது-
மாநில அரசு கடைகள் ஒரு சில இடங்களில் மட்டுமே இருப்பதால் மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் தேவையற்ற பிரச்சினைகளும் கைகலப்புகளும், சச்சரவுகளும் உருவாகும்.
தற்போது குளிர் காலம் துவங்க இருப்பதால் நீண்ட வரிசைகள் காணப்படும். இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பேரவை வளாகத்திற்குள் மதுபான கடையை திறக்க வேண்டும்.

சபாநாயகர்
பேரவையின் குளிர்கால கூட்டம் தொடர் டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்குகிறது. அப்போது தங்களின் இந்த விருப்பத்தையும் தேவையையும் குறித்து முதல்வர் ரகுபர் தாஸின் கவனத்து கொண்டு செல்லுமாறு சபாநாயகர் தினேஷ் ஓரானை சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அரசு சாரா கடைகள் மூலம் மக்களுக்கு மது விற்பனை செய்யும் அரசு, தங்களது கோரிக்கைகளை ஏற்று பேரவை வளாகத்திற்குள்ளேயே விற்பனை செய்வதில் என்ன தயக்கம்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களின் இந்த கோரிக்கைக்கு முக்கிய எதிர்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவளித்துள்ளதுடன் இதுகுறித்து பேரவையில் விவாதம் எழுப்பப்பட்டால் அது நன்றாக இருக்கும் என்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
