Like A Magician PM Modi Tries To Divert Attention Rahul Gandhi

குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஏன் ஊழல் குறித்து பேச மறுக்கிறார்? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். 

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்தது. 14-ம் தேதி நடக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்காக தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

பதான் மாவட்டம், ஹரிஜ் நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பேரணியில் காங்கிரஸ் துணைத் தலைவர்ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது-

பிரதமர் மோடி முதலில் நர்மதா நதி நீரை குறிப்பிட்டு தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், நர்மதா நதி நீர் கிராமங்களுக்கு சென்று சேரவில்லை. டாடாவின் நானோ கார் நிறுவனத்துக்கு சென்றது. அதன்பின் அந்த திட்டத்தை கைவிட்டார். 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெரும் தொழிலதிபர்களுக்கான அரசாக இருக்காது, விவசாயிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், சிறு வணிகர்களுக்காகவும் ஆதரவாக இருக்கும்.

ஊழலை ஏன் பேசவில்லை

பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் ஊழல் குறித்து எதுவுமே பேசுவதில்லை. அது ஏன் என உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால், அமித் ஷா மகன் ரூ50 ஆயிரத்தை ரூ.80 கோடியாக மாற்றிவிட்டாரே?

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் குறித்த பேச்சு பற்றியும், தன்னைப் பற்றியும் மட்டுமே மோடி பேசுகிறார். ஆனால், தேர்தல் என்பது மோடி குறித்தோ, ராகுல், சோலங்கி குறித்தோ அல்ல. குஜராத்தின் எதிர்காலம் குறித்ததாகும்.

10 நாட்களில் தள்ளுபடி

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளின் கவலையைப் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு, தொழிலதிபர்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 10க்கும் மேற்பட்ட பெரிய தொழில் அதிபர்களுக்கு லட்சக்கணக்கிலான கோடி கடன்களை தள்ளுபடி செய்து இருக்கிறது. ஆனால், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, விவசாய கடன் தள்ளுபடி செய்வது பா.ஜனதா அரசின் கொள்கை அல்ல என்கிறார். விவசாயிகள் என்ன தவறு செய்தார்கள்?.

இவ்வாறு அவர் பேசினார்.