கூட்டாளியாக ஒருவரை சேர்ப்பதற்கு முன் அவரைப்பற்றி அலசி ஆராயவிட்டால் பெருந்துன்பம் சூழும் என்று திமுகவை மறைமுகமாக விடுதலைச் சிறுத்தைகள் எச்சரித்துள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மமக உள்ளிட்ட கட்சிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒரே அணியாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கட்சிகள் அடங்கிய கூட்டணி தேர்தல் அணியாக உருவெடுக்கும் எனப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாமகவுடன் திமுக கூட்டணி என்று வரும் செய்திகள் விடுதலைச் சிறுத்தைகளின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. 

திமுக தரப்பில் பாகமவுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்து வருவதும் அந்தக் கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாமக இடம் பெறும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். இதேபோல அந்தக் கட்சியின் முன்னணியினர் திமுக கூட்டணியில் இடம் பிடிக்க பாமக முயற்சி செய்வதை விமர்சித்து வருகிறார்கள். 

பாமகவை திமுக கூட்டணியில் இடம் பெறாமல் இருக்க, வெளிப்படையாகவும் சில நேரத்தில் மறைமுகமாகவும் விடுதலை சிறுத்தைகள் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் விசிகவின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு திமுகவை எச்சரிக்கும் வகையில் முக நூல் பக்கத்தில் திருக்குறள் ஒன்றைப் பதிந்து, அதற்கு பொருளும் தெரிவித்திருக்கிறார். வன்னி அரசு. அந்தத் திருக்குறள் இதுதான்:  

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். - திருவள்ளுவர் ( பொருட்பால்- தெரிந்து தெளிதல்) கூட்டாளியாக ஒருவரை சேர்ப்பதற்கு முன் அவரைப்பற்றி அலசி ஆராய வேண்டும். அப்படி ஆராயாமல் சேர்த்துக்கொண்டால், தலைமுறை தலைமுறைக்கும் பெருந்துன்பம்தான் சூழும். - வன்னி அரசு. 

இப்படி ஒரு திருக்குறளை வன்னி அரசு நேற்று இரவு வன்னி அரசு பதிவு செய்திருந்தார். பாமகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை என்று செய்திகள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், இந்தத் திருக்குறளை அவர் பதிவிட்டுள்ளார்.