அரசியலில் ஈடுபடுவாரா மாட்டாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி, புதிய கட்சி தொடங்குவது உறுதி எனவும் இதுகுறித்த அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.மேலும் ரஜினியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தால், ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் எனத் தெரிவித்தார். 
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ரஜினிகாந்த் கட்சித் தொடங்குவது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, “அவர் (ரஜினி) முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும். அறிவிப்பை மட்டும்தானே வெளியிட்டிருக்கிறார். அவர் கட்சியைப் பதிவு செய்த பிறகு அதுபற்றி பதில் சொல்கிறேன். கற்பனையான விஷயங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.