திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக ஆலோசனை கூட்டத்தில் அடுத்த கட்ட தேர்தல் கள பணிகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் ஊருக்கு ஊர் சென்று கூட்டம் நடத்துகிறார் எங்கும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதை எல்லாம் செய்யும் போது திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவது காவல் துறை ஆளுங்கட்சிக்கு பயந்து கடமை தவறி செயல்படுவதை காட்டுகிறது. 

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த கூட்டத்தில் கூட்டணி பற்றி பேசவில்லை. வாக்காளர் சரி பார்க்கும் பணிகள், தேர்தல் பிரச்சாரம் போன்றவை பற்றி பேசப்பட்டது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பாஜக - காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி பற்றி கேள்விக்கு, திமுக-விற்கு எந்த அழைப்பும் மூன்றாவது அணி குறித்து வரவில்லை. எல்லா மாநில கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இணைந்து குரல் கொடுத்து வருகின்றன என குறிப்பிட்டார். பாஜக - அதிமுக கூட்டணி பற்றிய கேள்விக்கு, பாஜக தமிழர்களுக்கு செய்த துரோகங்களை பட்டியலிட முடியும். மத்திய நிறுவனங்களில் வட நாட்டை சேர்ந்தவர்களை நியமிப்பது, கல்வி முறை மாற்றம்,  விவசாயி அழிப்பு என செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அதிமுக ஆதரவு தெரிவிப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம். தமிழர்கள் நலன் மீது அக்கறை இல்லை. அவர்களை காப்பாற்றி கொள்ள பேசிவருகின்றனர். 

தொடர்ந்து பேசிய அவர், பாஜக மிக பெரிய பொய்யர்கள் என்றால் அவர்கள் சகோதார்கள் அதிமுக. இனப்படுகொலை பற்றி தேர்தல் சமயத்தில் பேசி பல முறை தோல்வி அடைந்துள்ளனர் இம்முறை தோல்வி அடைவார்கள் என தெரிவித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்த, தமிழக ஆளுநரை திமுகபொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர்,  செவ்வாய் காலை (இன்று) 11:30 மணிக்கு ராஜ் பவனில் சந்திக்கின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.