சட்டமன்ற தேர்தலுக்கு பிறகே பாஜக கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி கூறியுள்ளார். இது அதிமுக- பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தலை சந்திப்பதற்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் வழக்கம் போல அதிமுக-திமுக இடையே நேரெதிர் போட்டி  என்ற நிலையே மீண்டும் உருவாகி உள்ளது. இந்நிலையில் இம்முறை எப்படியேனும் தமிழகத்தில் கால் பதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக பாஜக  தீவிர களப் பணியாற்றி வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் கடந்த சில தினங்களாகவே அரசியலில்  பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

 

ஒருமனதாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சி அதை வெளிப்படையாகவே ஏற்க மறுத்து வருகிறது. தேசிய கட்சியான பாஜகவின் தலைமையே அதிமுக கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என அடிக்கடி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறிவருவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும் அதை ஏற்காத பட்சத்தில் அதிமுக தனியாக போட்டியிடவும் தயங்காது எனவும்,  முக்கிய அமைச்சர்கள் பாஜகவை எதிர்த்து வருகின்றனர்.  மேலும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி தொடரும் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முனுசாமி உள்ளிட்டோர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் அண்ணாநகரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன், பாஜக தேசிய பொதுச் செயலாளரும் தமிழக பாஜகவின் பொறுப்பாளருமான சி.டி ரவி, தமிழக பாஜகவின் இணைப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். இதில் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பாஜகவில்  இணையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கட்சியின் உட்கட்டமைப்பு, தேர்தலில் ஆற்ற வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது. இதற்குப் பின்னர் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  

இதுவரை அதிமுக பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்படவில்லை, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே அது முடிவு செய்யப்படும். தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மையை பொறுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூடி முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்படும், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக இந்த முறை எப்படியேனும் சட்டமன்றத்திற்குள் கால்பதிக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளும், பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிக்கு முயற்சி செய்யும் இவ்வாறு அவர் கூறினார்.