ஆந்திராவின் ஒண்டிமிட்டா ஏரியில், சேலத்தை சேர்ந்த ஐந்து ஆண்கள் பிணமாக மிதந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படாமல் போனதற்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் விமர்சகர்கள்.

அது ஒரு புறம் கிடக்கட்டும்! இந்த ஐவரின் சாவானது, சேஷாசல வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது போன்று, அடித்துக் கொல்லப்பட்டார்களா? என்று சிலர் சந்தேகங்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மர்ம சாவுகள் குறித்து புதிய விளக்கத்தை தருகின்றனர், இறந்த நபர்களுக்கு சொந்தமான கல்வராயன் மலை கிராம மக்கள்.
அவர்கள் சொல்வது இதுதான்...”ரெண்டு வாரங்களுக்கு முன்னாடி இந்த சுற்றுவட்டார பகுதிகள்ள இருந்து சுமார் எழுபது பேர் கிளம்பி போனாங்க.

இங்கே இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு நாலு மினி வேன்ல போனாங்க. பிறகு அங்கே அவங்களை இறக்கி லாரிகள்ள ஏத்தி கடப்பா காட்டுக்கு அனுப்பியிருக்காங்க. பொத்தாம் பொதுவா மரம் வெ’ட்டுறதுன்னு சொல்லி கூட்டிட்டு போயிருக்காங்க, செம்மரமுன்னு பல பேருக்கு தெரியாது.

அங்கே போயி உண்மையை புரிஞ்சுகிட்டு மரம் வெட்ட மறுத்திருக்காங்க. செம்மரத்தை வெட்டுறது திருட்டு வேலை!ன்னு சொல்லி முடியாதுன்னு சொல்லியிருக்காங்க. ஆனா செம்மரக்கடத்தல் பண்ற டீம் ஆளுங்களோ, ’வேலை பண்றேன்னு சொல்லிட்டுதான் இங்கே வந்திருக்க.

உங்களுக்கு திங்குறதுக்கும், தங்குறதுக்கும் செலவு பண்ணியிருக்கோம். இப்போ நீங்க மரத்தை வெட்டிப்போடலேன்னா உங்களை வெட்டிப் போட்டுட்டு போயிட்டே இருப்போம். இல்லேன்னா சுட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்போம்.

செம்மரம் கடத்த வந்த திருட்டு நாயுங்க அவங்களுக்குள்ளே சண்டை போட்டு வெட்டிக்கிட்டு, சுட்டுக்கிட்டும் செத்துட்டாங்கன்னு போலீஸு ரெக்கார்டு எழுதிட்டு போயிடும். நீங்க சாவறதை பத்தி ஆந்திரா போலீஸுக்கு என்னடா கவலை?

அதனால ஒழுக்கமா மரத்தை வெட்டுங்க.’ அப்படின்னு மிரட்டியிருக்காங்க. அதுக்கு பயந்தே அஞ்சு நாளா மரம் வெட்டியிருக்காங்க எங்க ஊர் ஆளுங்க. இதுக்கு அப்புறம் 16-ம் தேதியன்னைக்கு ஒரு லாரியில ஐம்பது பேரை ஏற்றி, அந்த லாரிய படுதா போட்டு மூடி காட்டுக்குள்ளே கூட்டிட்டு போயிருக்காங்க. அப்போ வனத்துறை மறிச்சிருக்கு. ஒரு அதிகாரி படுதாவை தூக்கி பார்த்திருக்காரு.

அப்போ, அவரு போலீஸூன்னு நினைச்சுட்டு சில பேர் லாரியில இருந்து குதிச்சு ஓடியிருக்காங்ககும் இருட்டுல காட்டுக்குள்ளே கண்ணு மண்ணு தெரியாம ஓடியிருக்காங்க. அப்போ தெரியாம ஏரியில விழுந்திருக்காங்க. அது சேறும், சகதியுமான ஏரி. இதுல சிக்குனதுல அஞ்சு பேருக்கு நீச்சல் தெரியாது. ஏரியில இருந்த பெரிய சைஸ் முள்ளெல்லாம் அவங்க காலை கிழிச்சிருக்குது.

நடக்க முடியாம தண்ணீரில விழுந்து மூச்சு திணறி செத்துட்டாங்க. லாரியில இருந்து கீழே குதிக்காம வனத்துறையோட கையில சில பேர் மாட்டியிருக்காங்க. அவங்க கதை என்னாச்சுன்னு தெரியலை.” என்கிறார்கள்.

செத்தவர்கள் போக, திரும்பி வந்தவர்கள் போக மீதி உள்ளவர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, செத்தார்களா என்று புரியாமல் கலங்குகிறார்கள் அம்மக்கள். இந்த பிரச்னையில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன? சேலம் தொழிலாளர்களை பொய் சொல்லி அழைத்து சென்றது  யார்? காணாமல் போனவர்களின் கதி என்ன?

இவற்றுக்கான விடையை, ஒரு நிமிடத்தில் உத்தரவிட்டு கண்டு பிடித்துவிட முடியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால்.
சொந்த மாவட்டத்து மக்களின் துயர் துடைப்பாரா முதல்வர்?