உசிலம்பட்டியில் சசிகலாவிற்கு ஆதரவாக ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது சசிகலா பேரவை தமிழகத்தில் முதன் முதலில் உதித்தது மதுரை அருகேயுள்ள உசிலம்பட்டியில் தான். அந்த பேரவையை ஆரம்பித்தவர் வழக்கறிஞர் சேது. நீண்டகாலமாக அதிமுகவில் இருந்தார்.அதன்பிறகு அமமுகவில் இணைந்தார்.அங்கு அவருக்கு தகுந்த மரியாதை இல்லாததால் தங்கதமிழ்செல்வன் திமுகவிற்கு சென்ற போது இவரும் திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக இருக்கிறார் சசிகலா. அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வெளிவந்தது. பின்னர் ஆகஸ்ட் 28ம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வந்தது. உண்மையில் , சசிகலாவுக்கான 10 கோடி ரூபாய் அபராத தொகையினை இன்னமும் கட்டாமல் இருப்பதாகவும், அதைக் கட்டி முடித்தவுடன் தான் சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை அறிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியானது.இன்னும் ஒரு சில நாட்களில் சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்து விடுவார் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் தான் இப்படியொரு போஸ்டர் உசிலம்பட்டியில் மிளிர ஆரம்பித்திருக்கிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒச்சாத்தேவர் என்பவர் சசிக்கலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் சசிகலா பாண்டிய நாட்டு வாரிசு, முத்துராமலிங்க தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்தவர், அவருக்காக தற்கொலை படையாக மாறவும் தயாராக உள்ளோம்.2021 ஆண்டில் தஞ்சை அரண்மனை மன்னர் பேரரசியாக பொறுப்பேற்று தமிழனம் காக்க  தமிழ்நாட்டின் மக்களை காக்க ஆணையிடு.! ஒற்றர்படை போர்படை தயார் என அச்சிடப்பட்டுள்ளது. உசிலம்பட்டி பகுதி முழுவதும் ஒட்டியுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.