தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுத்து தமிழக அரசு கறாராக நடந்து கொண்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழு விவரம்:-

முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

சங்கடங்களையும் தடைகளையும் நீக்க வல்ல விநாயகப்பெருமானை வணங்கி அவர் திருவடி சரண் அடைந்தவர்களுக்கு நல்ல சொல் வளம், பொருள் வளம், மனபலம், உடல் நலம், ஆகிய அனைத்து வளங்களும் உண்டாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து அருகம்புல்லுடன் எருக்கம் பூ, அரளி மலர் மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல் போன்றவற்றை படைத்து பக்தியுடன் வழிபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்வார்கள். 

கேட்கும் வரத்தை கொடுக்கும் கடவுளாக கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் அருளால் அனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும். அன்பும், அமைதியும் நிலவட்டும், நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும். இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் எங்களது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக் கொள்கிறோம். என அந்தக் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.