மீஞ்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி ருக்மணி ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்து பெற்ற பதவியை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க முடியாது என்று ஸ்டாலினுக்கே சவால் விடுக்கும் வகையில் முரண்டு பிடித்து வருவதாக கூறப்படுகிறது

"நாங்கள் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம், முதல்வர் ஸ்டாலின் முடிந்ததை பார்த்துக் கொள்ளட்டும்" என கட்சியின் கட்டுப்பாட்டை மீறி மீஞ்சூர் பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்ற, மீஞ்சூர் நகர செயலாளரின் மனைவியும், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகலிங்கத்தின் மருமகளுமான ருக்மணி தெரிவித்துள்ளார். இது கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்ட அதிகாரபூர்வ வேட்பாளர் சுமதி தமிழ் உதயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சிமன்ற தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. அதேபோல் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு சில துணைமேயர் மற்றும் பேரூராட்சி, நகராட்சி தலைவர் பதவிகளை ஒதுக்கியது. அந்தவகையில் நேற்று அப்பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போது திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட சில இடங்களில், கட்சியின் உத்தரவை மீறி சில இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்கள் களமிறங்கி வெற்றி பெற்றனர். இது கூட்டணிக்கிடையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சுமதி தமிழ் உதயன்

கூட்டணி தர்மத்தை மீறி நடந்து கொண்டவர்களை உடனே ராஜினாமா செய்ய வைக்க வேண்டுமென திமுக கூட்டணி கட்சிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தினர். இது தொடர்பாக டுவிட்டரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை கண்ணியம் கட்டுப்பாடு இது மூன்றில் மிக முக்கியமானது கட்டுப்பாடுதான். எனவே அந்த கட்டுப்பாட்டை மீறி தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிற திமுகவினர் தங்களது பதவியை ராஜினமா செய்துவிட்டு என்னை வந்து சந்தியுங்கள் என அவர் அறிவித்திருந்தார்.

முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை கேட்டு பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததுடன் முதல்வரை நேரில் சந்தித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய முடியாது என முரண்டு பிடித்து வருகின்றனர். அந்த வரிசையில் மீஞ்சூர் திமுக நகர செயலாளர் மோகன்ராஜ் அவரது மனைவி ருக்மணியும் இணைந்துள்ளனர். அதாவது திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. அதில் 14 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக 1 வார்டிலும், சுயேட்சைகள் மூன்று வார்டிலும் வெற்றி பெற்றனர்.

அதிருப்தி வேட்பாளர் ருக்மணி மோகன்ராஜ்

இந்நிலையில் திமுக சார்பில் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளராக, 11 வது வார்டில் வெற்றி பெற்ற முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் சுந்தரத்தின் மருமகள் சுமதி தமிழ் உதயன் தலைமையால் அறிவிக்கப்பட்டார். அதனடிப்படையில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சுமதி தமிழ் உதயன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதே நேரத்தில் 10 வது வார்டில் வெற்றி பெற்ற திமுக அதிருப்தி வேட்பாளர் ருக்மணி மோகன்ராஜ், சுமதியை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் திமுகவுக்குள்ளாகவே தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது.

இது திமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மீஞ்சூர் பேரூராட்சி கூட்ட அரங்கில் மறைமுக வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில் ருக்மணி மோகன்ராஜ் 9 வாக்குகள் பெற்றிருந்தார். இதேபோல் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான சுமதி தமிழ் உதயன் 9 வாக்குகளைப் பெற்றார். இருவரும் சம வாக்குகள் பெற்ற நிலையில் தேர்தல் அதிகாரி சுமதி உதயனுக்கு விழுந்த ஒரு வாக்கு செல்லாத வாக்கு என கூறி அதிருப்தி வேட்பாளர் ருக்மணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

அதிருப்தி வேட்பாளர் ருக்மணியின் கணவர் மோகன்ராஜ் திமுகவின் நகர செயலாளர் என்பதாலும், அவரது மைத்துணர் ரமேஷ் மீஞ்சூர் ஒன்றிய செயலாளராக இருப்பதாலும் தங்களுக்கான அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் அதிகாரியை மிரட்டி தன் மனைவி ருக்மணி வெற்றி பெற்றதாக அறிவிக்க வைத்ததாக சுமதி உதயன் தரப்பினர் குற்றஞ்சாட்டினர். ருக்மணியின் வெற்றியை எதிர்த்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் ஸ்டாலின் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தலைமையில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்திருப்பவர்கள் தங்களது பதவியை துறந்து விட்டு தன்னை வந்து சந்திக்க வேண்டுமென எச்சரித்தார். 

இந்நிலையில் நகர செயலாளர் மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி ருக்மணி ஆகியோர் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்து பெற்ற பதவியை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க முடியாது, ஸ்டாலின் சொல்வதையெல்லாம் கேட்க முடியாது. அவரால் முடிந்ததை பார்த்துக் கொள்ளட்டும் என ஸ்டாலினுக்கே சவால் விடுக்கும் வகையில் முரண்டு பிடித்து வருவதாக கூறப்படுகிறது.

தான் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் தனக்கு எதிராக களமிறங்கி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய ருக்மணி, நகர செயலாளர் மோகன்ராஜ், மற்றும் அவரது மைத்துனர் ரமேஷ் ஆகியோர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுமதி தமிழ் உதயன் வலியுறுத்தியுள்ளார்.