இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதுதான் காரணம். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் தனித்தனியே தேர்தலில் நின்றன.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக, ஓரணியில் திரண்டு போட்டியிட்டு இருந்தால் பாஜக வெற்றி பெற்றிருக்காது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக நான்கில் வெற்றி பெற்றது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா என இந்த நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சிதான் இருந்தது. இங்கு ஆட்சியை பாஜக தக்க வைத்துக்கொண்டது. காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து எதிர்க்கட்சிகள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றன. அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவனும் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார். கோவையில் செய்தியாளர்களை திருமாவளவன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தாலும், 2017-இல் நடந்த தேர்தலைவிட இந்த முறை பாஜக வென்ற இடங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதுதான் காரணம். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் தனித்தனியே தேர்தலில் நின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக, ஓரணியில் திரண்டு போட்டியிட்டு இருந்தால் பாஜக அங்கு வெற்றி பெற்றிருக்காது. எனவே இனிவரும் காலத்திலாவது பாஜகவைத் தோற்கடிக்க வேண்டுமென்றால், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் அணி திரள வேண்டும். ஒவ்வொரு கட்சியும் ஈகோவை விட்டுவிட்டு ஓரணியில் திரண்டு செயல்பட வேண்டும். அப்படிஎதிர்க்கட்சிகள் செயல்பட்டால் நிச்சயமாக பாஜவை வீழ்த்த முடியும். பாஜகவினர் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடி வருகிறார்கள். பாஜகவின் இந்தச் செயல் ஆபத்தான சூழலுக்கான அறிகுறியாகும்." என்று திருமாவளவன் தெரிவித்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த திருமாவளவன், “கோல்குல்ராஜ் கொலை வழக்குத் தீர்ப்பு வரவேற்புக்குரியது. அந்த வழக்கின் வெற்றிக்காக உழைத்த வழக்கறிஞர் ப.பா.மோகனை நாங்கள் பாராட்டுகிறோம். ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்குத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும். இதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் விரைந்து அதற்கான தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
