பஞ்சாபில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 8:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை நடக்க உள்ளது.
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2 கோடியே 14 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 93 பெண்கள் உள்பட ஆயிரத்து 304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள துடிக்கும் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி, பாஜக, பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா ஆகிய கட்சிகளை எதிர்கொள்கிறது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை ஆளும் காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்படக்கூடும் என்று தெரிகிறது.

கிராமப்புற பகுதிகளில் ஆம் ஆத்மி அதிக இடங்களைக் கைப்பற்றும். நகரங்களில் பாஜக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். சிரோமணி அகாலி தளம் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றும் என்று அரசியல் நோக்கர்கள் கணித் துள்ளனர். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பதார் மற்றும் சம்கவுர் சாகிப் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த இரு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அவருக்கு கடும் சவாலாக உள்ளனர்.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ் ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அகாலி தளத்தின் மூத்த தலைவர் பிக்ரம் சிங் மஜிதா களமிறங்கியிருப்பதால் இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. பஞ்சாப் முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரிந்தர் சிங், பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறை காங்கிரஸ் வாக்கு வங்கி அவருக்கு கிடைக்காது என்பதால் அவரது வெற்றி வாய்ப்பு சவாலாகி உள்ளது.

அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ஜலாலாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2012, 2017 தேர்தல்களில் இந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பெரோஸிபூர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றதால் ஜலாலாபாத் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அதே தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் சிங்குக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 24 ஆயிரத்து 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 2 ஆயிரத்து 14 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. 196 வாக்குச் சாவடிகள் பிரத்யேகமாக பெண்களாலும் 70 வாக்குச்சாவடிகள், மாற்றுத்திறனாளிகளாலும் இயக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
