திமுக எம்எல்ஏ அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கமல் பேசியது சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கையில் தான் கமல் கடந்த 2017ம் ஆண்டு கட்சியே ஆரம்பித்தார். ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமையவில்லை. இதற்கு காரணம் தொகுதிப்பங்கீடு பிரச்சனை தான் என்கிறார்கள். கமல் 3 தொகுதிகள் எதிர்பார்த்த நிலையில் திமுக ஒரே ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முன்வந்தது. அதிலும் அந்த தொகுதியில் கமல் தான் போட்டியிட வேண்டும், திமுகவின் உதய சூரியன் சின்னத்தில்போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட டென்சனில் தான் கமல் கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் பிரச்சாரங்களில் அதிமுகவை விமர்சித்த அதே அளவிற்கு திமுகவையும் கடுமையாக விமர்சித்தார். சில இடங்களில் ஸ்டாலினை கூட நேரடியாக அட்டாக் செய்து பேசினார். இதனால் அப்போது முதலே திமுக – மக்கள் நீதி மய்யம் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. திமுக தலைமை கமல் கட்சியை கண்டுகொள்ளவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் திமுகவினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் மல்லுகட்டி தான் வருகின்றனர்.

இந்த நிலையில் தான் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் கமல். நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் – ஸ்டாலின் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் இது. நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறந்து புதிய ஒரு உறவுக்கு வழிவகுக்கவே இந்த முயற்சியை கமல் மேற்கொண்டதாக சொல்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நகர்பகுதிகளில் மக்கள் நீதிமய்யம் கணிசமாக வாக்குகளை வென்றது. அதிலும் திமுக பலவீனமாக உள்ள கொங்கு மண்டலத்தில் கமல் கட்சிக்கு யாரும் எதிர்பார்க்காத வாக்குகள் கிடைத்தன.

இதனை முன்வைத்தே சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி பேச கமல் வியூகம் வகுத்துள்ளார். அதிலும் திமுகவுடன் கூட்டணி என்பது தான் கமலின் தற்போதைய திட்டம் என்கிறார்கள். 20 தொகுதிகளை வரை கேட்டுப் பெற்று திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் என்ற வியூகத்துடன் தான் கமல் தற்போது கட்சியை வழிநடத்தி வருவதாக சொல்கிறார்கள். அவரது கவனம் முழுக்க முழுக்க நகர்பகுதி வாக்காளர்களை மட்டுமே சார்ந்து உள்ளது. நகர்பகுதி வாக்காளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பட்சத்தில் கூட்டணி பேரத்திற்கு வசதியாக இருக்கும் என்றும் கமல் நம்புகிறார்.

சட்டபபேரவை தேர்தலில் தனித்து களம் இறங்கினால் ஒன்றும் தேராது, விஜயகாந்த் கட்சி போல் ஆக வேண்டியது தான். அதே சமயம் கூட்டணியை சரியாக முடிவு செய்தால் பாமக போல ஒரு செல்வாக்கான கட்சியாக நகர்புறங்களில் வலம் வரலாம் என்கிற கணக்கு தான் திமுகவை நோக்கி கமலை நகர்த்தியதாகவும் பேச்சு அடிபடுகிறது. கிராமப்பகுதிகளில் பிறகு பார்த்துக் கொள்ளலாம் முதலில் நம்மை பற்றி தெரிந்த நகர்பகுதிகளில் கட்சியை வலுப்படுத்தலாம் அதற்கு திமுக கூட்டணியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வியூகம் வகுத்தே ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசி அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்திக் கொண்டுள்ளார் கமல்.