கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும் இடதுசாரிகள் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளனர்.
 கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் இடதுசாரிகள் படுதோல்வியைச் சந்தித்தது. கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இடதுசாரிகள் அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆழப்புழா தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. கேரளாவில் இடதுசாரிகள் தோல்விக்கு சபரிமலை விவகாரமே காரணம் என்று அண்மையில் நடந்த கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒப்புக்கொண்டது.


இந்நிலையில் கேரளாவில் காலியாக இருந்த 44 உள்ளாட்சி வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி 22 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 17 வார்டுகளிலும் பாஜக 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

 
 நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற காங்கிரஸ் கூட்டணி குறைவான வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த இடதுசாரிகள் கணிசமாக வெற்றியைப் பெற்றுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமாக வாக்கு வங்கியை உயர்த்திய பாஜக, உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் வெற்றி பெற்று கவனம் பெற்றுள்ளது.