அமெரிக்காவில் ட்ரம்ப் ஆதரவாளர்கள்  ஜோ பைடன் இன் வெற்றியை எதிர்த்து பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி அது வன்முறையில் முடிந்துள்ள சம்பவத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்  ஜோ பைடன் வெற்றிபெற்றார். துணை அதிபராக கமலா ஹரிசன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சி நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. தேர்தல் சபை வாக்குகள் ஆதரவுடன் சான்றிதழ் வழங்குவதற்காக துணை அதிபர் மை பென்ஸ் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் திடீரென ஆயிரக்கணக்கில் அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் அவர்கள் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் அதனை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர், அதில் ஒரு பெண் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வன்முறையாக மாறியது. பின்னர் ஏராளமான பாதுகாப்பு படையினர்  அங்கு குவிக்கப்பட்டு அக் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அமெரிக்க பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற  வன்முறைக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறை அவமானகரமானது. இது அமெரிக்காவில் ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதல், அமைதியான மற்றும் ஒழுங்கான அதிகாரி பரிமாற்றம் நடைபெற வேண்டும் என்பது மிக அவசியம் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். 

அதேபோல் இது குறித்து தெரிவித்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லயன், அமெரிக்க பாராளுமன்றம் மற்றும் ஜனநாயகத்தின் வலிமையை நான் நம்புகிறேன். அமைதியான அதிகார மாற்றம் மிகவும் முக்கியமானது. ஜோபிடன் தேர்தலில் வெற்றி பெற்றார் அவருக்கே ஆதரவு அளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

இந்த ஜனநாயக தேர்தலில் முடிவு மதிக்கப்பட வேண்டும் என்று நோட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் துருக்கியின் வெளியுறவு அமைச்சகம், இதுகுறித்து புதன்கிழமை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவிலுள்ள தங்கள் நாட்டுக் குடிமக்கள் நெரிசலான இடங்களையும், கலவர பகுதிகளையும் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள அனைத்து தரப்பினரும் நிதானத்துடனும், பொது  அறிவுடனும் செயல்பட வேண்டும் என நாங்கள் அழைக்கிறோம். இந்த உள்நாட்டு அரசியல் நெருக்கடியை அமெரிக்கா தனது முதிர்ச்சியால் சமாளிக்கும் என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது. 

பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜூன் யவ்ஸ் லு ட்ரையன் இது குறித்து கூறுகையில். இது ஜனநாயகத்திற்கு எதிரானது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் எனக் கூறியுள்ளார். அதேபோல் அமெரிக்க மாநிலகுழு அமைப்பும் இந்த வன்முறையை கண்டித்துள்ளது. பாராளுமன்றத்துக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவது ஜனநாயக செயல்பாட்டிற்கு எதிரான கடுமையான தாக்குதல் ஆகும். பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.