நித்யகண்டம்! ஆனால் பூரண ஆயுசு! என்றுதான் தினம் தினம் செத்துப் பிழைத்து ஓடிக் கொண்டிருக்கிறது திருநாவுக்கரசரின் ‘தமிழக காங்கிரஸ் தலைவர்’ பதவி. அந்த நாற்காலியின் நான்கு கால்களையும் மற்ற கோஷ்டிகளின் தலைவர்கள் ரம்பத்தால் ராவிக் கொண்டே இருக்கின்றனர் நெடுங்காலமாய்! இதுவரையில் அது விழவுமில்லை ஆனால் அரசரின் நெஞ்சில் நிம்மதியுமில்லை. 

இந்த நிலையில், அரசரின் ஆளுமை பற்றி வெளிப்படையாக வகுந்தெடுத்திருக்கிறார் தமிழக காங்கிரஸின் மாஜி தலைவரான இளங்கோவன். அவர் “தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியொன்றும் யாருக்கும் நிரந்தரமில்லை. என்னை விட்டு அது விலகியிருக்கிறது, பிறகு தேடி வந்திருக்கிறது. இப்போது மீண்டும் கூட என் கைகளுக்கு வரலாம். 

திருநாவுக்கரசர் எப்படி நிர்வாகம் செய்கிறார்? என்று சிலர் கேட்கிறார்கள். கட்சிப்பணிகளில் அவரது தீவிரம் போதாது. இன்னமும் பழைய கட்சிகளின் பாசத்திலேயே திளைத்திருக்கிறார். அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க.வில் தன்னோடு பயணித்துவிட்டு இங்கே வந்திருப்பவர்களுக்கு மட்டும் பதவி தராமல், நெடுநாள் விசுவாசிகளையும் அவர் அரவணைக்க வேண்டும். ஆனால் இவர் அப்படி செயல்படாத காரணத்தால் உண்மை தொண்டர்கள் உற்சாகமிழ்ந்து கிடக்கிறார்கள். 

இன்னொரு மிக முக்கியமான விஷயம்! அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தவர் திருநாவுக்கரசர். அதனால் அவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலையெல்லாம் போடுகிறார்! அதில் தவறில்லை. அதை நான் குறைசொல்லவில்லை. 

ஆனால், எம்.ஜி.ஆர். படத்தை எங்கள் கட்சியின் மாநில அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்குள் கொண்டு வந்து மாலை போடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எம்.ஜி.ஆர். படத்துக்கு எங்கள் அலுவலகத்தில் என்ன வேலை இருக்கிறது? இதை பாரம்பரியமான காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தேசிய நீரோட்டம் கொண்ட காங்கிரஸ் கட்சியில் புதியதான ஒரு அரசியல் தத்துவத்தையோ, சித்தாந்தத்தையோ திணிப்பதை தடுத்து ஒடுக்குவோம்.” என்று விளாசியிருக்கிறார்.

அரசருக்கு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவர் மீதும் பெரும் பாசம் இப்பவும் தொடர்கிறது. இளங்கோவன் மிக சரியாக அந்த உணர்வை சீண்டியிருப்பதன் மூலம் அரசர் இதற்கு அதிரடியாக பதில் கொடுப்பார் என்று தெரிகிறது. 
ஆக காங்கிரஸுக்குள் அடுத்த களேபரம் உறுதி.