தலைவரான அன்புமணி.. மகனை கட்டித் தழுவி கண்ணீர் விட்ட ராமதாஸ்.. நெகிழ்ந்த பாட்டாளிகள்.
அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற நிலையில் அவரின் கரத்தைப் பற்றிக்கொண்டு அக்கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் கண்கலங்கினார்.
அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற நிலையில் அவரின் கரத்தைப் பற்றிக்கொண்டு அக்கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் கண்கலங்கினார். இது அங்கிருந்த பாமக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் என்ற கட்சி தொடங்கப்பட்டு 30 ஆண்டுகாலம் நிறைவடைந்துள்ளது. அக்கட்சியில் 25 ஆண்டு காலம் தலைவராக இருந்த ஜி.கே மணி தனது பதவியை அன்புமணி ராமதாசுக்கு கொடுத்து வழிவிட்டு ஒதுங்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜி.கே மணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியானது. இது பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
ராமதாஸ் தனது மகனுக்கு தலைவர் பதவியை வழங்குவதற்காக ஜிகே மணியின் தலைவர் பதவியை பறிக்க போகிறார் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் வாரிசு அரசியல் அப்பட்டமாக தெரிகிறது என்றும் பலர் விமர்சித்து வந்தனர் இது ஒரு புறமிருக்க, இன்று சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் பாமக பொதுக்குழு கூட்டம் கூடியது. அது பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கட்சித் தலைவர் ஜிகே மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது மேடையில் உரையாற்றிய ஜி.கே மணி இது பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு கூட்டம், தமிழகமே எதிர்பார்க்கும் பொதுக்குழு கூட்டம். பாட்டாளி மக்கள் கட்சியை சீரமைப்பு செய்து இன்னும் வளர செய்ய அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை இங்கே முன்மொழிகிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 2.0 செயல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற அக்கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை பொறுப்பேற்க ஒருமனதாக தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார். அவரின் இந்த தீர்மானத்தை அங்கு திரண்டு இருந்த பாமக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக வரவேற்றனர். இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் பாமக வின் தலைவரானார். அப்போது ராமதாஸ் அன்புமணி ராமதாசுக்கு மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். கட்சியின் முக்கிய தலைவர் ஜி.கே மணி, ஏ.கே மூர்த்தி போன்றோர் அன்புமணி ராமதாசுக்கு வெள்ளி ஸ்தூபி கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது மருத்துவர் ராமதாஸ் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய், தாய் வரவில்லை தாயுள்ளத்தோடு தகப்பன் வந்திருக்கிறேன் எனக் கூறி அன்புமணி ராமதாசை கரங்களைப் பற்றி கண்கலங்கினார். அது அங்கிருந்த பாமக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அன்புமணி புதிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு மாற்றம் உண்டாகும் என ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.