சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உள்ளிட்ட மூவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்துவருகிறார்கள். சசிகலாவின் தண்டனை காலம் முடியும் தருவாயை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நன்னடத்தைக் காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகையை சசிகலா இன்னும் கட்டவில்லை.

 
இந்த அபராதத்தைக் கட்டி முடித்த பிறகே சசிகலா விடுதலை குறித்து சிறைத் துறை முடிவு செய்யும் என்ற தகவல் வெளியானது. அதன் ஒரு பகுதியாகவே அபராத தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி சசிகலா தன்னுடைய வழக்கறிஞருக்குக் கடிதம் எழுதினார். இந்நிலையில் சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலை ஆவார் என்று அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “கர்நாடக சிறை விதிகளின்படி சிறைக் கைதிகள் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். சசிகலா 43 மாதங்கள் சிறைவாசத்தை நிறைவு செய்துள்ளார். இந்த 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே, சசிகலா ஒரு வாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிகமிக அதிகம். அதற்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரும்” என ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.