சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உள்ளிட்ட மூவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்துவருகிறார்கள். சசிகலாவின் தண்டனை காலம் முடியும் தருவாயை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நன்னடத்தைக் காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகையை சசிகலா இன்னும் செலுத்தவில்லை.


இந்த அபராதத்தைக் கட்டி முடித்த பிறகே சசிகலா விடுதலை குறித்து சிறைத் துறை முடிவு செய்யும் என்ற தகவல் வெளியானது. அதன் ஒரு பகுதியாகவே அபராத தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி சசிகலா தன்னுடைய வழக்கறிஞருக்குக் கடிதம் எழுதினார். இந்நிலையில் சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலை ஆவார் என்று அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சசிகலா விடுதலை குறித்து இரு நாட்களில் தகவல் வெளிவரும் என்று செந்தூர்பாண்டியன் மீண்டும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தசரா பண்டிகை காரணமாக கர்நாடகாவில் நீதிமன்றங்கள் விடுமுறையில் இருந்தன. எனவே, நீதிமன்றத்திலிருந்துதான் இனிதான் ஏதாவது தகவல் வரும். சசிகலா செலுத்த வேண்டிய அபராத தொகையைச் செலுத்துவது தொடர்பாக கடிதம் மூலம் தெரிவிப்பார்கள். அதன்பிறகே நாங்கள் உடனே நீதிமன்றத்தில் பணத்தை செலுத்த ஏற்பாடு செய்வோம். அதன்பிறகு இரு நாட்களில் சசிகலா விடுதலை தொடர்பான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வெகு விரைவில் சசிகலா விடுதலை ஆவார் என்ற தகவலால் சசிகலா முகாம் பரபரப்பு அடைந்துள்ளது. தேர்தல் நெருங்கிவரும் வேளையில் சசிகலாவின் விடுதலை முக்கியத்துவம் பெற்றுள்ளது.