மாவட்ட ஆட்சியர்களும் காவல்துறை அதிகாரிகளும் விழிப்போடு செயல்பட்டு சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டும் என்றும்,  தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பாடுபட வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை, தலைமை செயலகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை அதிகாரிகளும் விழிப்போடு செயல்பட்டு சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டும் என்றார். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தமிழகத்தை முதன்மையான மாநிலமாக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பாடுபட வேண்டும். 

பொதுமக்களுக்கு வெளிப்படையாக பணியாற்ற வேண்டும் அரசின் நலத்திட்டங்களை மக்களை சென்றடைய அதிகாரிகள் பாடுபட வேண்டும். பயங்கரவாதம், மதவாதம், இடதுசாரி தீவிரவாதம் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல், வழிப்பறி கொள்ளைகள், நகைப்பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ரோந்துப்பணிகளை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்புக்கு இரு துருவங்களைப் போல இல்லாமல் இது கண்களைப்போல பணியாற்ற வேண்டும்

பொது இடங்களில் இளைஞர்கள் ஆயுதங்களால் அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா, தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்நிலைய காவலர்களே பொறுப்பு என்று கூறினார்.

பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மீது நடவடிக்கை சூதாட்டம் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட காவல்நிலைய காவலர்களே பொறுப்பு. கந்து வட்டி புகார்கள் மீது அதீத வட்டி வசூலித்தல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில்களில் தீ விபத்து நடைபெறாவண்ணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் பொதுமக்களின் சேமிப்பு பணத்தை ஏமாற்றுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைகளில் கண்காணிப்பை அதிகாரித்து குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.