குழந்தைகளுக்காக பெற்றோர் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது என்று ஆழ்துளை கிணற்றில் சிக்கி போராடிவரும் சுர்ஜித் விஷயத்தில் லதா ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து போராடி வருகிறது. அந்தக் குழந்தையை மீட்பதற்காக அரசு எந்திரங்களும் போராடிவருகின்றன. தீபாவளி திருநாளை தாண்டி தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக பலரும் தங்களுடையை ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இதுதொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.


 “திருச்சியில் குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது தமிழகத்துக்கே மிகவும் துயரமான சம்பவம். சுர்ஜித் எப்போது மீட்கப்படுவான் என்பதை எதிர்பார்த்து நானும் காத்திருக்கிறேன். ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வையும் அதுகுறித்த பாதுகாப்பு ஒழுங்குமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும்.  குழந்தைகள் பாதுகாப்புக்காகத் தேசிய அளவில் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும்.
குறிப்பாக குழந்தைகளுக்காக ஒவ்வொரு மாநில அரசும் தனிக்குழுக்களை உருவாக்க வேண்டும். இந்தியாவில் எந்தச் சட்டத்தை கொண்டு வந்தாலும் அதன் மூலம் கிடைக்கும் வரி வருவாயைக் குழந்தைகளுக்காகச் செல்லும் வண்ணம் செய்ய வேண்டும். தற்போது குழந்தைகளுக்காக பெற்றோர் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது” என வருத்தத்துடன் லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.