தமிழகத்தின் அரசியல் மேடைகளில் 'காமராசர் ஆட்சி அமைப்போம்' என்று முழங்காத தலைவர்கள் கிடையாது. சுதந்திரத்திற்கு பிறகான தமிழக அரசியல் வரலாற்றில் 9 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காமராசரின் காலம் தான் இப்போது வரையிலும் பொற்காலம் என்று போற்றப்படுகிறது. கல்வி, விவசாயம், தொழில்துறை என அனைத்திலும் இன்றும் தமிழ் நாடு முன்மாதிரியாக திகழ்வது என்றால் அதற்கான விதை விதைக்கப்பட்டது காமராஜர் ஆட்சியில் தான். நேர்மையும் எளிமையும் கொண்ட தூய அறம் சார்ந்த அரசியலை முன்னெடுத்தவர் அவர். அதனால் தான், "காலத்தின் கடைசி கருணை காமராசர்" என போற்றி புகழ்ந்தார் கண்ணதாசன்.

தான் ஆட்சிப்பொறுப்பில் இருந்த நேரத்தில் எந்த விதத்திலும் தன்னால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் காமராசர். தன் பெயரைச் சொல்லி உறவினர்கள் அதிகாரத்தை பயன்படுத்திவிட கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார். அதனால் தான் தள்ளாத வயதில் இருந்த தாயை கூட அவர் தன் அருகில் வைத்து கொள்ளவில்லை. தாய்க்கும், விதவையாக இருந்த அவரது தங்கைக்கும் சென்னையில் இருந்து அவர் அனுப்பும் 130 ரூபாயில் தான் விருதுநகரில் குடும்ப செலவுகள் நடக்கும்.

காமராசர் முதல்வராக பொறுப்பேற்ற நேரத்தில் விருதுநகரில் இருந்த அவரது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருக்கிறது. அதை கட்டித்தர சொல்லி தாய் சிவகாமி கேட்டிருக்கிறார். அதற்கு காமராசர், " முதலமைச்சர் ஆனதும் வீடுலாம் கட்டிட்டான் காமராசுன்னு நாலு பேரு பேசுவான். அதுலாம் வேண்டாம். நீ சும்மா இருன்ணேன்.." என்று கூறியிருக்கிறார்.

ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக காமராசர் மதுரையில் இருந்து காரில் திருநெல்வேலி சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் விருதுநகரில் இருக்கும் அவரது தாயை பார்ப்பதற்காக வீட்டிற்கு செல்கிறார். எப்போதாவது வரும் மகனை பார்த்த சந்தோஷத்தில், கட்டாயம் சாப்பிட்டு தான் செல்ல வேண்டும் என தாய் வற்புறுத்த சம்மதம் தெரிவிக்கிறார் காமராசர். சாப்பிட்டு முடித்து கை கழுவும் போது வீட்டில் புதியதாக தண்ணீர் குழாய் இருப்பதை பார்த்த அவர், தாயிடம் " நீ காசு கொடுத்து போட்டியமா..?" என கேட்டுள்ளார்.

அதற்கு அவரது தாய், " நீ முதல்வரானதும் அதிகாரிகள் சில பேர் வந்து அவங்களா போட்டு போனாங்கய்யா.. நா எதுவும் கேக்கல " என்று தெரிவிக்கவும் காமராசருக்கு கோபம் தலைக்கேறியது. உடனடியாக உள்ளூர் அதிகாரிகளை அழைத்த காமராசர், " நா காசே கட்டாம நீங்க எப்படி தண்ணீருக்கு இணைப்பு கொடுக்கலாம். இதுமாதிரி எத்தனையோ வயசானவங்க தண்ணி புடிக்க கஷ்டப்படுவாங்க. எல்லோருக்கும் இப்படி போட்டு கொடுப்பீங்களா? முதலமைச்சரே தப்பு பண்ணுனா மத்தவங்க எப்படி ஒழுங்கா இருப்பாங்க. பதவியை பயன்படுத்தி அவரவர் வீட்டை பாத்தா நாடு உருப்பட்ட மாதிரி தான். உடனே இதை எடுத்துட்டு போங்கனேன்" என்று உத்தரவிட்டார். உடனே இணைப்பு துண்டிக்கப்பட்டது. காமராசரின் தாயும் தங்கையும் மீண்டும் தெருவின் பொது குழாயில் தண்ணீர் பிடிக்கலாயினர்.

எத்தனை பெரிய காரியம் இது. சாதாரண வார்டு உறுப்பினராக  ஆனாலே அரசின் அத்தனை திட்டங்களையும் வீட்டு வாசலுக்கு வரவைக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மாநில முதல்வராக இருந்தும் தனக்கு மட்டுமில்லாது தள்ளாத வயதில் இருந்த தனது தாய்க்கும் கூட எந்த சலுகையும் காட்டாதவர் தான் பெருந்தலைவர் காமராசர்.

5 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர், 9 ஆண்டுகள் தமிழக முதல்வர், 4 முறை நாடாளுமன்ற உறுப்பினர், 5 முறை சட்டமன்ற உறுப்பினர், 2 பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கர். இத்தனை பெரிய பெருமைகள் இருந்தும் அவர் இறந்த பின்பு அவரிடம் இருந்தது 60 ரூபாயும், சில கதர் வேட்டி சட்டைகளும் தான்.

ஆம்.. அவர் தான் உண்மை ஏழைத் தாயின் மகன்..!