கடந்த 19 ஆண்டுகளில் பள்ளி மாணவிகளுக்கு எதிராக சுமார்  171 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .  குறிப்பாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு அதிக அளவில் ஆளாக்கப்படுகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே .  ஆகவே இதுபோன்ற வன்முறைகளை தடுக்க அரசும் காவல் துறையும் எத்தனையோ பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும் குற்றச் சம்பவங்கள் குறைந்ததாக தெரியவில்லை . 

இந்நிலையில்  தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் குறித்து புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளனர் .  இப் புள்ளி விவரங்கள் அனைத்தும் மாநில தகவல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது .  அதாவது பள்ளி மாணவிகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக முருகேசன் என்பவர் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு விசாரணை சென்னையில் உள்ள  மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் முத்துராஜ்  முன்னிலையில் நடைபெற்றது . அதில் பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குனர் ,  தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ,   மற்றும் காவல் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில் கடந்த 19 ஆண்டுகளில் பள்ளி மாணவிகளுக்கு எதிராக சுமார் 171 பாலியல் குற்றங்கள் நடந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் புள்ளிவிவரம் அளித்துள்ளனர் . மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின்  விவரத்தை பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகள் அப்போது வலியுறுத்தப்பட்டது.  இப்படி செய்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் எனவும் குற்றவாளி ஆசிரியர்கள் மற்ற பள்ளிகளில் சேருவதை  தடுக்க முடியும் என்றும் அப்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.