தேசிய மற்றும் சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக குறிப்பிட்ட நாட்டிற்கோ அல்லது மாநிலத்திற்கோ முதலீடுகள் வருவது பெரிதும் குறைந்துவிட்டது. அதிலும் கொரோனா தாக்கத்திற்கு பிறகு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. ஆனால் இத்தகைய இக்கட்டான தருணத்திலும் இந்தியாவிலேயே அதிகளவில் முதலீடுகளை ஈர்த்து சாதனை படைத்திருக்கிறது தமிழக அரசு.

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தொழில்துறை சார்பில் 19 ஆயிரத்து 995 கோடி ரூபாய் முதலீட்டில், 26 ஆயிரத்து 509 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதனைத் தொடர்ந்து 4 ஆயிரத்து 456 கோடி ரூபாய் முதலீட்டில் 27 ஆயிரத்து 324 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் ஐந்து நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தவிர, 47 கோடி ரூபாய் முதலீட்டில் 385 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் ஒரு நிறுவனத்தின் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. நவீன உலகுக்கான புதிய சிந்தனைகள், சீரிய செயல்திறன், தொடர் செயல்பாடுகள், நிலைத்தன்மை ஆகிய நான்கும் அரசின் செயல்பாடுகளின் அடித்தளமாக விளங்குகின்றன. இதன் காரணமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.

தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லவும், பல உயரங்களை தொடவும், முழு முனைப்போடு அரசு செயல்பட்டு வருகிறது. நாளை வருவதை இன்றே கணித்து, அதற்கேற்ற முறையான திட்டமிடலுடன் செயல்பட்டு, வளமான வருங்காலத்தை உருவாக்கிடும் மக்களின் அரசாக தமிழகம் உள்ளது. கொரோனா காலத்தில், முழுமையாக களத்தில் இறங்கி, மக்களுடன் இணைந்து, பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தது. இன்று, நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொருளாதார மறுசீரமைப்பில், தமிழகம் சிறப்பான முன்னேற்றம் பெற்றுள்ளது. அதிக அளவில் புதிய முதலீடுகள்; ஜி.எஸ்.டி., வரி வசூலில் ஏற்பட்டுள்ள, இரட்டை இலக்க வளர்ச்சி என, தமிழக அரசு செய்து வரும் சாதனைகளை, இந்தியாவே உற்று நோக்கி பார்க்கிறது’’ என்றார்.

இது பற்றி தொழில்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது,’’கடந்த 4 ஆண்டுகளில் தமிழக தொழில்துறை வரலாறு காணாத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 3 லட்சத்து, 501 கோடி ரூபாய் முதலீட்டில், 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், 304 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இதில், 24 ஆயிரத்து, 492 கோடி ரூபாய் முதலீட்டில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் 81 திட்டங்கள் அதாவது, 27 சதவீத திட்டங்கள், ஒரே ஆண்டில் வணிக உற்பத்தியை துவக்கியுள்ளன. மேலும், 191 திட்டங்கள், பல்வேறு செயல்பாட்டில் உள்ளன. கடந்த, 22 மாதங்களில் மட்டும், 60 ஆயிரத்து, 905 கோடி ரூபாய் முதலீட்டில், ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் வகையில், 120 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இது தவிர இப்போதும் தமிழகத்தை நோக்கி பெரும் தொழில் முதலீடுகள் வர தயாராக உள்ளன’’என்கிறார்கள்.