பெரியார் பேரனே இப்படி பண்ணலாமா?: இளங்கோவனை உரசிப்பார்க்கும் விமர்சனங்கள்
தி.மு.க. எனும் பேரியக்கத்தின் தலைவர் எனும் ஈகோவெல்லாம் இல்லாமல் அவர் மன்னிப்பு கேட்டது அனைத்து அரசியல் தலைவர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு இடையில் நடந்த மோதலை விட மிகப்பெரிய பரபரப்பாக பார்க்கப்படுவது தேர்தல் முடிவுகளுக்குப் பின் தன் கூட்டணி கட்சியினரோடு தி.மு.க. நடத்தும் மோதல்தான். அதாவது கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி பதவிகளை தி.மு.க.வினர் லபக்கிவிட்டதால் இரு தரப்புகளுக்கும் இடையில் நடக்கும் மோதல்தான் மிகப்பெரிய பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
தி.மு.க. நிர்வாகிகள் தலைமையின் உத்தரவை மதிக்காமல் இப்படி மோசமாக நடந்து கொண்டாலும், அந்த விவகாரம் தன் கவனத்துக்கு வந்ததுமே ஒப்பனாக வருத்தம் தெரிவித்து, மன்னிப்பும் கேட்டார் முதல்வர் ஸ்டாலின். தானொரு முதல்வர், அதிலும் தனி மெஜாரிட்டியில் பதவியை பிடித்தவர், தி.மு.க. எனும் பேரியக்கத்தின் தலைவர் எனும் ஈகோவெல்லாம் இல்லாமல் அவர் மன்னிப்பு கேட்டது அனைத்து அரசியல் தலைவர்களையும் ஆச்சரியப்படுத்தியுளது.
இதைத்தான் குறிப்பிட்டு பேசியுள்ள மாஜி காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் “கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளைப் பறித்துக் கொண்ட தி.மு.க.வினரை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், மாவட்டச் செயலர் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளார். இதன் வாயிலாக கூட்டணி தர்மத்தை அவர் காப்பாற்றி இருக்கிறார் என்பது தெரிந்து, அவர் மீதான மரியாதை அதிகரித்துள்ளது.” என்று வாழ்த்துப் பா பாடியுள்ளார்.
இதற்கு ரியாக்ட் செய்திருக்கும் அரசியல் விமர்சகர்கள் ‘என்ன இளங்கோவன் சார் திடுதிப்புன்னு தி.மு.க. தலைவரை பாராட்டுறீங்க. நீங்க எப்பவுமே கூட்டணியில தி.மு.க.வுக்கு எதிர் நிலை எடுக்குற ஆளாச்சே, அப்புறம் எப்படி இந்த வாழ்த்துப் பாடலெல்லாம்? ஓ புரிஞ்சு போச்சு, உங்கள் கட்சியில இப்ப உங்களுக்கு மரியாதை குறைஞ்சுட்டு இருக்குது. ராகுல், சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த விஷயத்துலேயே இது அப்பட்டமா தெரிஞ்சு போச்சு. அதனால உங்களோட செல்வாக்கை காப்பாத்திக்க இப்படி ஸ்டாலினுக்கு ஐஸ் வைக்கிறீங்களோ? அவர் மூலமா பேசி, சொந்த கட்சி பஞ்சாயத்தை தீர்த்துக்கலாம்னு ஐடியாவா?
ஸ்டாலின் ‘பெரியார் வழி ஆட்சி’ன்னு தி.மு.க. ஆட்சியை சொல்லிகிறார். நீங்களோ பெரியாரோட பேரன்! அப்படியிருந்தும் இப்படியெல்லாமா அரசியலுக்காக கர்வத்தை விட்டுக் கொடுக்குறது?” என்று செமத்தியாய் கலாய்க்கின்றனர்.
இளங்கோவன் திருப்பித் தாக்க ஆரம்பித்தால் இவர்கள் நிலை அதோகதியாகிடும்..!