பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரி நிலம் வாங்க முயன்ற போது 1.75 கோடி ரூபாய் மோசடி செய்து ஏமாற்றிய திமுக முக்கிய பிரமுகர் தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார். 

தமிழகத்தில் மிகப் பிரபலமான லலிதா ஜூவல்லரி பல ஊர்களில் தனது கிளைகளை நிறுவி வருகிறது. புனித ஸ்தலமான திருவண்ணாமலையில் கிளை திறக்க முடிவு செய்த அந்நிறுவனம் இதற்காக இடம் தேடியபோது திருமஞ்சன கோபுரம் அருகே தனது பெயரில் இடம் இருப்பதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக பொருளாளராகவும் உள்ள பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு தனது இடம் எனக் கூறிய பன்னீர்செல்வம் 1.75 கோடி ரூபாய்க்கு லலிதா ஜூவல்லரிக்கு இடத்தினை விற்பனை செய்துள்ளார். அது சம்மந்தமாக ராதா பிரச்சனை செய்த போது பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மேலும் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஜூவல்லரி தரப்பு முக்கிய பிரமுகர்கள் மூலமாக பன்னீர்செல்வத்திடம் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பயனில்லை. 

இதனைத்தொடர்ந்து, லலிதா ஜூவல்லரியின் திருவண்ணாமலை கிளை மேலாளர் பத்மநாபன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், தனது தனிப்பட்ட செல்வாக்கு, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விவகாரத்தை அமுக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், லலிதா ஜூவல்லரி தரப்பு இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்ட சிபிசிஐடி பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனிடையே, தாம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் அவர் தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார்.