Land for job Scam: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்வின் டெல்லி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!!
நில மோசடி வழக்கில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்வின் டெல்லி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
பீகாரில் மற்றொரு வழக்கில் நேற்று பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு இருந்தனர். இந்த நிலையில், இன்று டெல்லியில் இருக்கும் தேஜஸ்வி யாதவ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், லாலுவின் மகளுமான மிசா பாரதியின் டெல்லி வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இவர்களுடன் சேர்த்து பீகாரில் முன்னாள் எம்எல்ஏ அபு தோஜனா வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
பீகார், டெல்லி, என்சிஆர் என்று மொத்தம் 15 இடங்களில் சோதனைநடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறையின் பல்வேறு குழுக்கள் ஒரே நேரத்தில் இந்த இடங்களில் சோதனை நடத்தி வருகின்றன. நில மோசடி ஊழலில் சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
பீகாரில் நேற்று ராப்ரி தேவியிடம் அவரது வீட்டில் வைத்து நான்கு மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, சோதனை நடத்தி இருந்தனர். அதேசமயம் டெல்லியில் இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் மிசா பாரதியின் வீட்டில் வைத்து லாலுவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சோதனை வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரும் என்றும், தங்களுக்கு இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். ''வயதானவர்களை மத்திய அரசு துன்புறுத்துகிறது. அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம்'' என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலுவின் மகள் ரோஹினி ஆச்சார்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்தாண்டு சிங்கப்பூரில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட லாலு பிரசாத் யாதவ் கடந்த மாதம் தான் இந்தியா வந்தார். குற்றவியல் சதி மற்றும் குற்றத்தடுப்பு விதிகள் சட்டத்தின் கீழ் ராப்ரி தேவி, லாலு பிரசாத் யாதவ் மற்றும் 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து இருந்தது. இவர்கள் அனைவருக்கும் வரும் மார்ச் 15ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பார்ம்.. மார்ச் 12ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி !!