Asianet News TamilAsianet News Tamil

எனது “தர்ம யுத்த”த்திற்கு பீகாரே துணை நிற்கிறது.. என்னை யாராலும் ஜெயிக்க முடியாது!! மார்தட்டும் லாலு..!

lalu prasad opinion about fodder scam verdict
lalu prasad opinion about fodder scam verdict
Author
First Published Dec 23, 2017, 5:54 PM IST


கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஷ்ராவை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

பீகார் முதல்வராக லாலு பிரசாத் பதவிவகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 1994-95-ல் சைபாசா கருவூலத்திலிருந்து 78 போலி ஒதுக்கீடு கடிதங்கள் மூலம் ரூ.37.7 கோடி பணத்தை லாலு எடுத்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பாக லாலு பிரசாத் மீது சிபிஐ மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்தன. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ல் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் லாலு ஜாமீனில் வெளிவந்தார்.

இதனிடையே ஒரே புகாரின் கீழ் வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி லாலு பிரசாத் தரப்பில், ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. குற்ற நடைமுறைச் சட்டத்தின் படி, ஒரே குற்றத்திற்காக ஒருவர் மீது இருமுறை குற்றம்சாட்ட முடியாது என்று கூறி லாலு மீதான விசாரணையை நிறுத்துமாறு ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், அரசு கருவூலங்களிலிருந்து வெவ்வேறு காலக்கட்டங்களில் பணம் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் இரண்டு முறையும் நிதி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களும் பயனடைந்த நபர்களும் வேறு வேறு என சிபிஐ தெரிவித்தது.

இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், அரசு கருவூலத்திலிருந்து பணம் எடுத்தது மற்றும் ஆவணங்களில் முறைகேடு செய்தது தொடர்பாக லாலு உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. 

இந்த வழக்கில் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகன்நாத் மிஷ்ரா உட்பட 34 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கு விசாரணையின்போதே 11 பேர் உயிரிழந்துவிட்டனர். ஒருவர் சிபிஐ தரப்பு அப்ரூவராக மாறிவிட்டார். 

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. லாலு பிரசாத் உட்பட 15 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை விவரத்தை வரும் ஜனவரி 3ம் தேதி தெரிவித்தது. இந்த வழக்கிலிருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஷ்ரா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள லாலு பிரசாத், உண்மையைச் சுற்றி தற்போது பொய் சூழ்ந்துள்ளது. மிக வலிமையான பொய் பிரசாரம் நடக்கிறது. பொய் பாதி தூரம் பயணப்பட்டுள்ளது. ஆனால், உண்மையை மூடி மறைத்து சூழ்ந்துள்ள பொய், விரைவில் நீக்கப்பட்டு உண்மை வெளிப்படும். இறுதியில் உண்மை வென்றே தீரும்.

நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், பாபாசாகேப் அம்பேத்கர் போன்றவர்கள் தங்கள் முயற்சியில் தோல்வியுற்றிருந்தால் அவர்களை வரலாறு வில்லன்களாகத்தான் சித்தரித்திருக்கும். எனது தர்ம யுத்தத்தில் ஒட்டுமொத்த பீகாரும் எனக்கு துணையாக நிற்கிறது. எனக்கு தொந்தரவு வேண்டுமானால் கொடுக்கலாம். ஆனால் என்னை வெற்றி கொள்ள முடியாது என லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios