கால்நடை தீவன ஊழல் தொடர்பான 4 ஆவது வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்த தண்டனை வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்பட உள்ளது. 

ரூ.900 கோடி கால்நடை தீவன ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது 6 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. 

வழக்கை விசாரித்த ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 31 பேரில் 19 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உள்பட 19 பேரை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கில் 12 பேரை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது.

ஏற்கனவே கால்நடை தீவன ஊழல் தொடர்பான 3 வழக்குகளில் லாலு பிரசாத்துக்கு 13.5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தும்கா கருவூலத்தில் ரூ.3.5 கோடி முறைகேடு தொடர்பாக லாலு மீதான 4-வது வழக்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 5-ம் தேதி நிறைவடைந்தது. இவ்வழக்கில் இன்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஜெகநாத் மிஸ்ரா குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். 

ஆனால் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான தண்டனை வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.