சாதி அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் அவமானப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ளக்க கூடாது எனவும், தமிழக அரசு இது போன்ற சம்பவங்களை மிதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும்  தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம். 

ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி துணைத் தலைவர்கள் அவர்கள் சார்ந்திருக்கிற ஜாதியின் அடிப்படையில் அவர்களை அவமரியாதை செய்து நடத்தப்படுகின்ற நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கடலூர் மாவட்டம் புவனகிரி  ஒன்றியம் திட்டை ஊராட்சி தலைவி ராஜேஸ்வரி தேசிய கொடியை ஏற்ற விடாமல் தடுக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டார். இப்போது ஊராட்சி மன்ற கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டு அவ மரியாதைக்கு  உள்ளாக்கப்பட்டு இருக்கின்றார். 

அவர் மட்டும் தரையில் அமர்ந்திருக்க மற்ற அனைவரும் நாற்காலிகள் போட்டு அமர்ந்திருப்பது மிகக்கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை அவமரியாதை செய்வது ஜனநாயகத்தையும், சட்டத்தின் மாண்புகளையும் அவமதிப்பதாகும். இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறுவது மிகுந்த வேதனைக்குரியது. இந்த குற்றங்களை செய்யக்கூடியவர் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். 

ஜாதி மதங்களை கடந்து மக்கள் பணியாற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முன் வரக்கூடிய ராஜேஸ்வரி போன்ற சகோதரிகள் அவமானப்படுவதை இனிமேலும் பொறுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கு காரணமான அனைவரும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட கூடியவர்கள் தமிழக அரசு இதுபோன்ற செய்திகளை மிதமாக  எடுத்துக்கொள்ளாமல் தீவிரமாக கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுப்பதன் மூலம் மேலும் இதுபோன்ற குற்றங்கள் நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென்று  இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன் என பாஜக தமிழ் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.