பாஜக சார்பில் கன்னியாகுமரியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் எல். முருகன் பங்கேற்று பேசுகையில், “தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய கட்சியாக மாறி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய மாற்றம் தற்போது சென்னை வரை மாறியுள்ளது. அலை அலையாக மக்கள் பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள். மோடியின் நல்லாட்சிதான் இதற்குக் காரணம். தமிழகத்திலும் அதுபோன்ற ஓர் ஆட்சியை மக்கள் எதிர்பார்கிறார்கள்.


கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடைபெறக்கூடும். அதேபோல அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நம்முடைய முதல்வர் கொடியேற்றுவார். கன்னியாகுமரியில் வீசுகிற அலை சென்னையில் போய் நிற்கும். தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் ரூ. 6 ஆயிரம் வீதம் செலுத்தியிருக்கிறோம்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறுபவர் மத்திய அமைச்சராக வருவார். கன்னியாகுமரியிலிருந்து நம்முடைய வெற்றியைத் தொடருவோம். கொரோனா காலத்தில் பாஜகவினர் ஏழைகளுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார்கள்.  நாம் இந்த தொகுதியில் வெற்றி பெறுவோம் என சபதம் ஏற்போம்” என்று எல்.முருகன் பேசினார்.