ராமர்- சீதையின் உருவப்படங்களை பெரியார் ஊர்வலத்தில் செருப்பால் அடித்ததால் தான் பிற்காலத்தில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது என தி.க., தலைவர் வீரமணி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

துக்ளக் பொன்விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பேசுகையில், ’’பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. செருப்பு மாலை போடப்பட்டது’’என்று பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு உருவானது. பெரியாரிய அமைப்புகள் சம்பவத்தை ரஜினி திரித்துக்கூறுகிறார் என குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்பட்டு வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியாரியல் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கோரிக்கை விடுத்தார்.

இதனை அடுத்து கோவையை சேர்ந்த திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த நேருதாஸ், கோவை மநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், ’’1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை ரஜினிகாந்த் பேசி உள்ளார். இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தையை பரப்பி பொது அமைதியை குலைக்கும் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153ஏ மற்றும் 505 ஐபிசி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த், பேசியதற்கு முன்பே ராமர்- சீதை உருவங்களை பெரியார் ஊர்வலத்தில் செருப்பால் அடித்தது உண்மை தான். ராமர் சீதை உருவங்களை செருப்பால் அடித்ததால்தான் திமுக பெரும் வெற்றி பெற்றது என திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. 

 

ஆக கி.வீரமணி பேசியதை தான் ரஜினியும் பேசியுள்ளார்.  ரஜினி பேசியது பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்பட்டு வதந்தியைப் பரப்பியாக கருதப்படும் நிலையில், வீரமணி பேசியது பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதா? ரஜினி மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமானால், அதற்கு முன் கி.வீரமணி மீது தான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் இந்த வீடியோவை பார்ப்பவர்கள்.