கருணாஸ் கைது விவகாரத்தில் கூவத்தூர் வீடியோ விவகாரம் பரபரப்பாக பேசப்படுவதால் மு.க.ஸ்டாலின் உற்சாகத்திலும், டி.டி.வி தினகரன் கடும் கோபத்திலும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுமே அவரை கைது செய்யும் நடவடிக்கை துவங்கப்படவில்லை. ஆனால் வழக்கு பதிவு செய்யப்பட்ட மறுநாள் கூவத்தூர் ரகசியத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க தயங்கமாட்டேன் என்று கருணாஸ் கூறியது தான் பிரச்சனையை மிகவும் பெரிதாக்கியது. முதலில் கூவத்தூர் ரகசியம் என்று கருணாஸ் வழக்கம் போல் மிரட்டத் தான் கூறுகிறார் என்று ஆட்சியாளர்கள் நினைத்தனர். 

ஆனால் அதன் பிறகு தான் கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதி, கைமாறிய பரிசுப் பொருட்கள் என அனைத்தையும் சசிகலா தரப்பு வீடியோ எடுக்கச் சொல்லி கருணாஸ் எடுத்து வைத்திருக்கலாம் என்கிற சந்தேகம் வலுத்தது. இந்த வீடியோவை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் கருணாசை போலீஸ் காவலில் எடுக்க அரசு துடியாய் துடித்தது. ஆனால் நீதிமன்றம் கருணாஸ்க்கு சாதகமாக சில தீர்ப்புகளை வழங்கியதால் தமிழக அரசு பின்வாங்கியது. ஆனால் கருணாஸ்க்கு பிரச்சனை வேறு ரூபத்தில் வந்துள்ளது. 

இந்த விவகாரத்தில் கருணாஸ் தேவையில்லாமல் கூவத்தூர் ரகசியம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது தினகரனுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. காரணம் கூவத்தூரில் முன்னிலையில் இருந்து எம்.எல்.ஏக்களை கவனிக்கும் பொறுப்பு தினகரனிடம் தான் இருந்தது. அப்போது வீடியோ பதிவு செய்யப்பட்டதும் தினகரனுக்கு தெரியும். அந்த வீடியோவில் ஒரு காப்பி தான் இருக்கிறது அதுவும் தன்னிடம் தான் இருக்கிறது என்று தினகரன் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் வீடியோவின் மற்றொரு காப்பி தன்னிடம் இருப்பதாக கருணாஸ் தரப்பு தகவலை கசியவிட்டது தினகரனுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் சிறைக்கு சென்று கருணாசை தினகரன் சந்திக்கவில்லை. 

அதே சமயம் கூவத்தூர் வீடியோ விவகாரம் ஸ்டாலின் தரப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஏனென்றால் ஏற்கனவே எடப்பாடி அரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கூவத்தூர் வீடியோ மட்டும் வெளியானால் தமிழக அரசை கலைப்பதற்கான வாய்ப்பு கூட இருப்பதாக ஸ்டாலின் தரப்பு நம்புகிறது. அதனால் தான் வீடியோவை வைத்திருக்கும் கருணாசை தி.மு.க தாங்கிப் பிடிக்கிறது. 

நாடார்கள், வன்னியர்கள், கவுண்டர்களை மோசமாக பேசிய கருணாசை ஆதரிப்பதன் மூலம் அந்த சமுதாயத்தின் கோபத்திற்கு ஆளாகலாம் என்று எச்சரிக்கப்பட்ட நிலையிலும் ஸ்டாலின் கருணாஸ்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டதற்கு காரணம் இந்த வீடியோ தானாம். ஜாமீனில் வெளியே வந்த கருணாஸ் ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்ட நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் உள்ள ஸ்டாலின் அடுத்த வாரம் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம்.