நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் தொடர்பாளருமான குஷ்பு என்ன அவ்வளவு பெரிய தலைவரா என்ன? என்றும் எப்போதும் அவரைப் பற்றியே கேள்வி கேட்கிறீர்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன், கட்சியின் அமைப்பு பொது செயலாளர்கள் அசோக் கெலாட், முகுல்வாஸ்னிக் ஆகியோருடன் கட்சியை பலப்படுத்துவது குறித்து உரையாடி உள்ளோம்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஆய்வு கண்டிக்கத்தக்கது. ஆளுநர் என்பவர் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே ஒரு நல்ல பாலமாக இருந்து, மாநிலத்துக்குத் தேவையான நிதி கிடைக்க உதவி செய்ய வேண்டும்.

அதை விடுத்து, ஆளுநர் ஊர் ஊராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதைக் குறைத்துக் கொள்வது ஆளுநருக்கு நல்லது. நான் தலைமையேற்ற பிறகு கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை.

குஷ்புவிற்கே ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து கேள்வி கேட்கிறார்கள். குஷ்பு என்ன அவ்வளவு பெரிய தலைவரா? எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று திருநாவுக்கரசர் கூறினார்.