தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் அண்மையில் காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னையில் உள்ள கிரீன்வேயிஸ் சாலையில் உள்ள இல்லத்தில் பல தரப்பினரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு இன்று எடப்பாடி பழனிச்சாமி இல்லத்துக்கு நேரில் வருகை தந்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆறுதல் தெரிவித்த அவர், தாயார் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.


பின்னர் குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் மோடி ஏராளமான நன்மைகளை செய்கிறார். ஆனால், அதைப் பார்க்காமல் அவரது உடை, கண்ணாடியை மட்டுமே பார்க்கிறார்கள். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பாஜகவிற்கு மிகவும் முக்கியமான தேர்தல். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” என்றார்.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பது அக்கட்சியின் முன்னாள் தலைவரும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசையின் ஸ்லோகன் ஆகும். தற்போது குஷ்பு அதை கையில் எடுத்துள்ளார். இனி ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்ற சொற்றொடரை குஷ்பு வாயால் தொடர்ந்து கேட்கலாம்.