சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தது. இந்நிலையில் ராகுல் கல்லூரியில் பங்கேற்ற நிகழ்ச்சி தேர்தல் விதிமீறல் என்று பாஜக புகார் கூறியது. ஆனால், தேர்தல் ஆணையம் இதை நிராகரித்துவிட்டது. இருந்தபோதும், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும்போது ராகுல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது ஏன் என்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு உயர்க் கல்வித்துறை இணை இயக்குனர் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கருத்து தெரிவித்திருக்கிறார். “ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளிடம் ராகுல் கலந்துரையாடியதில் எந்தத் தவறும் இல்லை. மூன்றாயிரம் மாணவிகள் மத்தியில் ராகுல் சளைக்காமல் பதில் கூறி பேசினார். இந்தத் தைரியம் மோடிக்கு வருமா? ராகுல் கேட்ட எந்தக் கேள்விக்கும் இதுவரை மோடியால் பதில் கூற முடியவில்லை. அதனால் ஏற்பட்ட கோபம், மக்கள் மத்தியில் ராகுலுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.


அதனால் ஏற்பட்ட வெறுப்பு, பயம் காரணமாக கல்லூரியை தற்போது மிரட்டுகிறார்கள். பாஜக போல பணம் கொடுத்து கூட்டத்தை திரட்டுவது இல்லை.  ராகுல் பக்கம் மக்கள் திரள்கிறார்கள். அதனால் ஏற்பட்ட பொறாமையால் இப்படி செயல்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் அழகிரியும் உயர்க் கல்வித் துறை இணை இயக்குநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.