குறவர்குடி மக்களுக்கு நீதி வேண்டும்.. ரொம்ப வேதனையா இருக்கு!.. தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய சீமான் !
வாழ்வாதார உரிமைகளைப் பெற தொல்தமிழ் குறவர்குடி மக்களுக்குத் தங்கு தடையின்றிக் குடிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வாழும் குறவர்குடி மக்கள், தங்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குக் குடிச்சான்றிதழ் கேட்டு வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.
தொல்தமிழர்களான குறவர்குடி மக்களுக்குக் குடிச்சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மறுத்துவருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வாழும் குறவர்குடியைச் சேர்ந்த மாணவ – மாணவியர்களுக்குக் குடிச்சான்றிதழ் வழங்கப்படாததால் கல்வி, வேலைவாய்ப்பு, உதவித்தொகை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.
குடிச்சான்றிதழ் வழங்கக்கோரி மாணவர்கள் இணையதளம் வாயிலாக அனுப்பிய விண்ணப்பத்தை அரசு அதிகாரிகள் நிராகரித்துள்ளதைக் கண்டித்துக் கடந்த ஒரு வார காலமாக முற்றுகைப் போராட்டம் செய்துவரும் நிலையிலும் அவர்களின் கோரிக்கையை திமுக அரசு ஏற்காதது எதேச்சதிகாரப்போக்காகும்.
ஒடுக்கப்பட்டவர்களிலும் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாகப் பின்தங்கியுள்ள குறவர்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் பன்னெடுங்காலமாகப் பறிக்கப்பட்டு வருவது மாபெரும் சமூக அநீதியாகும். இழந்த தங்களது உரிமைகளை மீட்பதற்காகப் போராடும் தொல்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு தொடர்ந்து மறுத்து வருவது கொடுங்கோன்மையாகும். இதற்குப் பெயர்தான் சமூகநீதி காக்கும் திமுகவின் திராவிட மாடல் அரசா?
இதையும் படிங்க..பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலைவாய்ப்பு.. 281 காலியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி.?
தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியாளர்கள் உட்பட மற்ற அனைவருக்கும் உடனுக்குடன் தடையின்றிக் குடிச்சான்றிதழ் வழங்கப்படும் நிலையில், குறவர்குடி மக்களுக்கு மட்டும் குடிச்சான்றிதழ் வழங்குவதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாகுபாடு காட்டி வருவது சிறிதும் நியாயமற்றதாகும்.
ஆகவே, வனம் இழந்து, நிலமிழந்து, உரிமைகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு, விளிம்பு நிலையில் நலிந்த மக்களாய் வாழும் ஆதித்தமிழ் குறவர்குடி மக்களுக்கு இனியும் தாமதப்படுத்தாது உடனடியாகக் குடிச்சான்றிதழ் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
தங்களின் வாழ்வாதார உரிமைகளைப் பெறுவதற்குக் குடிச்சான்றிதழ் கேட்டுத் தொல்தமிழ் குறவர்குடி மக்கள் முன்னெடுத்து வரும் அறப்போராட்டத்திற்கு முழு ஆதரவளிப்பதோடு, அவர்களின் மிக நியாயமான கோரிக்கை வெல்ல நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்
இதையும் படிங்க..AIADMK: அகம்பாவம்.. ஆணவம்.! அதிமுகவின் தோல்விக்கு துரோகி எடப்பாடி தான் காரணம் - கொந்தளிக்கும் ஓபிஎஸ்