Kumari district should be declared as national disaster

குமரி மாவட்டத்தை தேசிய பேரிடராக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் கன்னியாகுமரி மாவட்டத்தை முழுமையாக சீரமைக்க ரூ. 8426 கோடி தேவை எனவும் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வலியுறுத்தியுள்ளார். 

ஓகி புயலால் குமரி மாவட்டம் பேரிழப்புகளை சந்தித்தது. மீனவர்கள் மாயம், மாவட்டம் முழுக்க வெள்ளம், விவசாயம் பாதிப்பு, உயிரிழப்புகள் என ஓகியில் சிக்கி குமரி மாவட்டமே சின்னாபின்னமானது. 

ஆயிரக்கணக்கான தென்னை, ரப்பர், வாழை மரங்கள் சாய்ந்தன. நெற்பயிர்கள் சேதமடைந்தன. மீனவர்களும் விவசாயிகளும் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர். 

ஓகி புயலில் சிக்கி பல்வேறு மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ள மீனவர்களை மீட்டு தமிழகம் கொண்டுவரும் பணிகள் நடந்துவருகின்றன.

இதைதொடர்ந்து ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். 

ஓகி புயலால் கடுமையான பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்திருக்கும் மீனவர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளிடம் கோரிக்கைகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இதனிடையே ஓகி புயலால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி விளக்கிக் கூறினார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது, நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு நிவாரண நிதியாக மத்திய அரசு 4047 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

இதையடுத்து ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுக்கு முதல்கட்டமாக ரூ. 325 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பாதிப்பு குறித்த அறிக்கையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடராக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் கன்னியாகுமரி மாவட்டத்தை முழுமையாக சீரமைக்க ரூ. 8426 கோடி தேவை எனவும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் டிசம்பர் 26 ஆம் தேதி மத்திய குழு தமிழகம் வருவதாகவும் கன்னியாக்குமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

ரேடியோ சேனல் உருவாக்கப்பட வேண்டும் எனவும் நிரந்தர தீர்வுக்கு ரூ. 8426 கோடி நிவாரண நிதியாக உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அறிக்கையில் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டார்.