தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் தமிழிசை களமிறங்கியிருக்கிறார். திமுக சார்பில் அக்கட்சியின் மகளிர் அணி தலைவர் கனிமொழி களமிறங்கியிருக்கிறார். தமிழக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தத் தொகுதி. தனது அண்ணன் மகள் தமிழிசைக்கு எதிராக கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளரும் குமரிஅனந்தனின் சகோதருமான வசந்தகுமார் கருத்து தெரிவித்திருந்தார்.

 
இந்நிலையில் தனது மகளும் தூத்துக்குடி பாஜக வேட்பாளருமான தமிழிசை வெற்றி பெறுவாரா என்பது பற்றி குமரி அனந்தன் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் உங்கள்  உங்கள் மகள் தமிழிசையை எதிர்த்து பிரசாரம் செய்வீர்களா என்று குமரி அனந்தனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த குமரி அனந்தன், “தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஆனால், தேர்தலில் யார்யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு” என்று தெரிவித்தார். தமிழிசைக்கு எதிராகப் பிரசாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு குமரி அனந்தன் பதில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.