kumaraswamy will go to trichy srirangam temple
கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. குமாரசாமி முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையே இன்று மாலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லாத சூழலில், தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்ததால், எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார். காங்கிரஸும் மஜத-வும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றிருந்தும் குமாரசாமியை ஆளுநர் அழைக்கவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டதால், நேற்று மாலை 3.30 மணிக்கு கர்நாடக சட்டசபை கூடியது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என தெரிந்ததால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.
இதையடுத்து குமாரசாமியை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 23ம் தேதி குமாரசாமி முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி, இன்று மாலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பூஜை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக தேர்தலுக்கு முன்னதாக, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என மஜத வேட்பாளர்கள் பட்டியலை வைத்து குமாரசாமியின் சகோதரர் ஸ்ரீரங்கம் கோவிலில் பூஜை செய்தார்.
இந்நிலையில் தற்போது காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி அமைந்து குமாரசாமி முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், காங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்களின் சான்றிதழ்களுடன் ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று மாலை தரிசனம் செய்ய உள்ளதகா தகவல்கள் வெளியாகியுள்ளன.
