பிரிட்டன் மற்றும் அமெரிக்கா சுற்றுப்பயணம் தொடர்பாக எடப்பாடி தரப்பில் இருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகாததன் பின்னணியில் மோசமான சென்டிமெண்ட் இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்.

தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா சென்று தொழில் அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். இந்த மாதம் 19-ம் தேதி முதல் இரண்டு வாரங்கள் அவர் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்ட சுற்றுப்பயண விவரம் கூட அதிகாரப்பூர்வமற்ற வகையில் வெளியானது. 

ஆனால், நாட்கள் செல்ல செல்ல வெளிநாடு சுற்றுப்பயணம் தொடர்பான தகவல்கள் குறைய ஆரம்பித்தன. இது குறித்து கோட்டையில் விசாரித்த போது ஓ.பன்னீர் செல்வத்திடம் பொறுப்புகளை கொடுத்துவிட்டு எடப்பாடி வெளிநாடு செல்ல தயங்குவதாக சொல்கிறார்கள். என்ன தான் நம்பிக்கைக்கு உரியவர்களாக தங்கமணி, எஸ்.பி.வேலுமணி இருந்தாலும் கூட கேபினட்டில் மூத்தவர் என்கிற வகையில் முதலமைச்சருக்கு உரிய கடமைகளை ஓபிஎஸ் தான் மேற்கொள்ள வேண்டும்.  

எனவே வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு சென்று தேவையில்லாமல் ஓ.பிஎஸ்க்கு ஏன் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி யோசித்ததாக கூறினார்கள். அதேபோல் வேறொரு சென்டிமெண்ட் விவகாரம் பற்றியும் கோட்டையில் பரபரப்பாக பேசுகிறார்கள். கர்நாடகாவில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து குமாரசாமி ஆட்சி செய்து வந்தார். அவ்வப்போது பிரச்சனைகள் வந்த போது அதனை குமாரசாமி எளிதாக எதிர்கொண்டார்.

  

ஆனால் அவர் அமெரிக்கா சென்றிருந்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எடியூரப்பா ஆட்சியை எளிதாக கவிழ்த்துவிட்டார். அந்த வகையில் குமாரசாமியின் முதலமைச்சர் பதவியை அமெரிக்க பயணம் தான் காவு வாங்கிவிட்டதாக கர்நாடகாவில் பேசிக் கொள்கிறார்கள். இதேபோல் தான் அமெரிக்கா செல்லும் போதும் ஸ்டாலின் ஏதாவது விவகாரத்தை அரங்கேற்றிவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறாராம் எடப்பாடி. எனவே அதற்கு உரிய சில பூஜைகள் செய்ய வேண்டியுள்ளதாகவும், அதனை செய்து முடித்த பிறகே அமெரிக்கா பயணம் குறித்து எடப்பாடியிடம் இருந்து அறிவிப்பு வெளியாகுமாம்.