கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பா.ஜ.க. குறைந்தபட்சம் 6 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும். 

இதனால் பா.ஜ.க. கட்சியை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தல் வாழ்வா, சாவா என்ற நிலையில் உள்ளது. அதேசமயம், எதிர்கட்சிகளும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தங்களது செல்வாக்கை நிருபிக்க வேண்டிய நிலையில் உள்ளன. விஜயநகராவில் நேற்று மதசார்ப்பற்ற ஜனதா தள வேட்பாளரை ஆதரித்து எச்.டி. குமாரசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில், கர்நாடகாவில் இடைத்தேர்தல்கள் வருமா என்ற கேள்விக்கே இடமில்லை. மக்கள் மீது மற்றொரு தேர்தலை சுமத்துவதை தவிர்க்க, இடைத்தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான (குறைந்தபட்சம் 6) இடங்களை பா.ஜ.க. பெற தவறினால் அந்த கட்சிக்கு ஜனதா தளம் (எஸ்) ஆதரவு அளிக்க தயார் என தெரிவித்தார்.

ஆனால் குமாரசாமியின் ஆதரவு தேவையில்லை என எடியூரப்பா தெரிவித்துள்ளார். விஜயநகராவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இது குறித்து அவர் கூறுகையில், எனது அரசுக்கு எந்த கட்சியின் ஆதரவும் தேவையில்லை. 

இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்க வேண்டுமானால் முதலில் காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவை முதலில் உருவாக்க வேண்டும். இது இங்கிருந்து தொடங்குகிறது. இதுதான் எங்கள் இடைத்தேர்தல் குறிக்கோள் என தெரிவித்தார்.