Kumarasamy talk about cauvery issue like siddaramaia and ediyurappa

நாங்களே காஞ்சுபோய் கிடக்கிறோம்…அப்புறம் எப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணி திறந்தவிட முடியும் ? என ஒரே குரலில் இது வரை சித்த ராமையாவும், எடியூரப்பாவும் கூறி வந்த நிலையில், தற்போது கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள குமாராசாமியும் அதே போன்ற பல்லவியைத் தான் பாடுகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்துக்கு சேர வேண்டிய காவிரி நீரை திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் கர்நாடக அரசு இதுவரை அதை மதித்ததே இல்லை, அது காங்கிரஸ், பாஜக அல்லது மஜத கட்சிகள் எதுவாக இருந்தாலும், வாக்கு வங்கியை கணக்கில் கொண்டு ஒரே மாதிரிதான் நடந்து வருகிறது.

இதனையடுத்து தற்போது உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் இப்பிரச்சனையில் தீர்ப்பு வழங்கிய நிலையில், காவிரி நீரை பகிர்ந்து கொள்ள , காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகாவது தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் திறந்து விடப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளவாறு கர்நாடகத்தில் புதிதாக அமையவுள்ள அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இதற்கு கர்நாடக முதலமைச்சராக நாளை பொறுப்பேற்கவுள்ள மஜத கட்சி தலைவர் குமாரசாமி, பதில் அளித்துப் பேசியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தேவையான தண்ணீர் இருந்தால் தானே தமிழகத்துக்கு தரமுடியும் என தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கர்நாடகத்துக்கு வந்து இங்குள்ள அணைகளை பார்க்க வேண்டும். எங்கள் விவசாயிகளின் நிலைமைகளை காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ரஜினிகாந்த் இங்கு வந்து அணைகளை பார்வையிட்டால் அவர் தனது நிலையை மாற்றிக் கொள்வார் என நினைக்கிறேன் என பதிலடி கொடுத்துள்ளார்.

காவிரி பிரச்சனையைப் பொறுத்தவரை கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் பதில் ஒரே மாதிரிதான் இருக்கும் போல.