இரண்டு முறை காங்கிரஸ், பாஜக ஆட்சியைக் கவிழ்த்த குமாரசாமி, இந்த முறை ஆட்சி கவிழ்ப்பால் தன்னுடைய பதவியை இழந்திருக்கிறார்.
தன் வினை தன்னைச் சுடும் என்பது பழமொழி. இந்தப் பழமொழிக்கு இன்று சரியான உதாரணமாகியிருக்கிறார் கர்நாடகாவில் பதவியை ராஜினாமா செய்திருக்கும் குமாரசாமி. தன்னுடைய கட்சியின் சக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் பதவி இழந்திருக்கும் குமாரசாமி, 10 ஆண்டுகளுக்கு முன்பு இரு அரசுகளைக் கவிழ்த்தவர் என்பதை பலரும் மறந்திருப்பார்கள்.
2004-ம் ஆண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது பாஜக தனிப்பெரும் கட்சியாக 79 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 63 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதாதளம் 58 இடங்களிலும் வெற்றி பெற்றன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இப்போதுபோலவே காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தன. முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தரம்சிங் பொறுப்பேற்றார்.
இருபது மாதங்கள் எந்த பிரச்னையுமின்று ஆட்சி சென்றுகொண்டிருந்தது. ஆனால், குமாரசாமிக்கு பாஜக தரப்பு, முதல்வர் ஆசையைக் காட்டி தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. அந்த முயற்சியில் குமாரசாமி சிக்கினார். இதனையடுத்து காங்கிரஸுடன் கூட்டணியை முறித்தார் குமாரசாமி. விளைவு, பெரும்பான்மை இல்லாமல் தரம்சிங் பதவியை இழந்தார். இதன்பிறகு மதசார்பற்ற ஜனதாதளமும் பாஜகவும் சேர்ந்து எஞ்சிய 40 மாதங்களை தலா 20 மாதங்கள் சுழற்சி முறையில் ஆட்சி அமைக்க முடிவு செய்து கூட்டணி அமைத்தன.


இதன்படி முதல் 20 மாதங்களுக்கு முதல்வராகப் பொறுப்பேற்றார் குமாரசாமி. 2006 பிப்ரவரியில் தொடங்கி 2007 அக்டோபரில் 20 மாதங்கள் முடிந்தபோது, உடன்பாட்டின்படி ஆட்சி அமைக்க எடியூரப்பா தயாரானார். அப்போதுதான் குமாரசாமி தன் சுயரூபத்தைக் காட்டினார். பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க முடியாது என்று அறிவித்தார் குமாரசாமி. இதனால், கர்நாடக அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. 35 நாட்களுக்கு மாநிலத்தில் சட்டப்பேரவை முடக்கப்பட்டது. 
இந்தக் காலகட்டத்தில் குமாரசாமியை எடியூரப்பா தாஜா செய்து, ஆதரவு தரும்படி அறிவிக்க செய்தார். அந்த அடிப்படையில் முதன் முறையாக எடியூரப்பா முதல்வரானார். ஆனால், ஓரிறு நாட்கள் நாட்கள் சென்றிருக்கும். சட்டப்பேரவையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை இருந்தது. குமாரசாமி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் மெஜாரிட்டியை எடியூரப்பா நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குமாரசாமியோ பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று அறிவித்து எடியூரப்பாவை நிலைகுலைய செய்தார். விளைவு, 7 நாட்களில் எடியூரப்பா அரசு முடிவுக்கு வந்தது.
இப்படி 10 ஆண்டுகளுக்கு முன்பு, இரு முதல்வர்களை கவிழ்த்து வீட்டுக்கு அனுப்பியவர் குமாரசாமி. இன்று அவருடைய ஆட்சி கவிழ்ந்து அவரே வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார். தன் வினை தன்னைச் சுடும் என்பது நிரூபணமாகிவிட்டதல்லவா?